வளர்ந்த பாரதம் உருவாக்க புதுமைகள் படைக்க வேண்டும்: ஜெய்சங்கர்

மும்பை: வரும் 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க புதுமைகளை படைப்பது மிகவும் முக்கியமானது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடந்த 'வேவ்ஸ்' உலக ஆடியோ விஷூவல் பொழுதுபோக்கு மாநாட்டில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: உலகம் பன்முகத்தன்மை கொண்டது.கடந்த காலங்களில் பன்முகத்தன்மையானது, காலனித்துவம் மற்றும் பெரிய சக்திகளின் ஆதிக்கத்தால் அடக்கப்பட்டது.
சர்வதேச அமைப்பை ஜனநாயகப்படுத்த, நமது மரபுகள், பாரம்பரியம், படைப்பாற்றலுக்கு நாம் குரல் கொடுக்க வேண்டும். 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க புதுமை முக்கியமானது.
தொழில்நுட்பத்தின் சக்தியை மிகவும் திறம்பட பயன்படுத்துவதன் மூலம் இது சிறப்பாக செய்யப்படுகிறது. அரசியல் நம்பகத்தன்மை தொடர்பான கவலைகளுடன் போராடும் அதே வேளையில், புதிய அறிவுசார் சொத்துரிமை சவால்களைச் சமாளிக்கவும் வேண்டியிருக்கும். இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.