dark_mode
Image
  • Thursday, 29 May 2025

மே 1: இன்று உழைப்பாளர்கள் தினம்

மே 1: இன்று உழைப்பாளர்கள் தினம்
உழைப்பைத் தேடி ஓடும் சாமானியர்கள் நாங்கள்உழைப்புக்கு ஜாதி, மதமோ ஆண் பெண் பேதமோ இல்லை. குடும்பத்திற்காக ஆண்கள் ஓய்வின்றி உழைக்கின்றனர் என்றால் அந்த அச்சாணி முறிந்து விடாமல் காப்பதற்காக பெண்களும் வேலைசெய்து கைகொடுத்து கரைசேர்க்கின்றனர்.
ஆணும் பெண்ணுமாக வேலை பார்க்கும் வீட்டில் விடுமுறை என்பது இருவருக்குமே கிடையாது தான்.இன்று (மே 1) உழைப்பாளர் தினம். கோடீஸ்வரனுக்கும் ஏழைக்கும் நேரம் ஒரே அளவு தான். ஒரு சாண் வயிற்றுக்காக ஏழை ஓடிக் கொண்டே இருந்தால் இருப்பதை தக்கவைப்பதற்காக பணக்காரர் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த உழைப்பில் உயர்வு, தாழ்வில்லை.

வீட்டுக்காக தங்களை அர்ப்பணித்து மெழுகாய் உருகி கொண்டிருக்கும் அனைவருமே கொண்டாடப்பட வேண்டியவர்கள். அவர்களின் ஒரு சிறு துளியாய் ராமநாதபுரம், சிவகங்கையில் சாமானியர்கள் சிலரிடம் உழைப்பாளர் தினம் குறித்து கேட்டோம். உள்ளத்தில் உறுதியோடு உழைப்பின் அவசியத்தை விளக்கினர்.அவர்கள் கூறியது...கை கொடுக்கும் கைத்தொழில் பி.சித்ரா, டெய்லர், ராமநாதபுரம்: இன்றைய காலக்கட்டத்தில் குடும்பத்தை சிரம மின்றி நடத்த பெண்களும் ஏதாவது கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொண்டு வருமானம் ஈட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம். அந்தவகையில் பத்தாம் வகுப்பு வரை படித்து வீட்டில் சும்மா இருக்காமல் ஏதாவது கைத்தொழில் கற்க விரும்பினேன்.

டெய்லரிங் கற்றுக்கொண்டு எனது கணவர் ஒத்துழைப்புடன் ஒரு கடையில் ஜாக்கெட், சுரிதார் போன்றவை தைத்தும்டெய்லராக பணிபுரிறேன். கிடைக்கும் கூலியில் வீட்டுச்செலவு, குழந்தைகளின் கல்வி செலவுபோக சேமிப்பது சிரமமாக உள்ளது. பெண்கள் படிப்பு மட்டுமின்றி இல்லாமல் ஏதாவது ஒரு கைத்தொழிலை கற்றுக்கொள்ள வேண்டும். அதுவே நமது வாழ்க்கையை சிரமன்றி நடத்த கைகொடுக்கும்.

இன்று மே 1 உழைப்பாளர் தினத்தில் என்னைபோன்ற பெண்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.கடலோடு போராடுவதே வாழ்வுஆரோக்கியராஜ், மீனவர்,ராமேஸ்வரம்: வாழ்வாதாரத்திற்கு தினமும் உயிரை பணையம் வைத்து கடலோடும், இயற்கை சீற்றத்திலும் போராடி மீன்களை பிடித்து கரை திரும்பும் எங்களுக்கு இத்தொழில் கடினமாக உள்ளது. இன்றைய நவீன உலகில்,இலங்கை கடற்படை தாக்குதல்,சிறைப்பிடிப்பு போன்ற சம்பவங்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்தினாலும், இந்த மீன்பிடி தொழிலில் பாரம்பரியமாக ஈடுபடுவதால் என் வாழ்வில் ஒன்றிணைந்த தொழிலாக கருதுகிறேன்.கடலையும் மீனையும் நம்பி வாழும் எங்கள் வாழ்க்கையில் கடைசி தலைமுறை இருக்கும் வரை மீன்பிடித்தல் தொடரும். தொழிலாளர்கள் தினமான இன்று, கடலில் பிரச்னை இன்றி மீன்பிடிக்கவும் , எங்கள் வாழ்வாதார பிரச்னைக்கு தீர்வு காணவும் மத்திய, மாநில அரசுகள் உறுதியளிக்க வேண்டும் என்றார்.ஓய்வில்லாத உழைப்புபி.என்.அருண் குமார், ஆட்டோ ஓட்டுனர், பரமக்குடி: உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்படுவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. தினம் தினம் பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் உழைப்பாளர்களின் நேர கட்டுப்பாட்டை உணர்த்தும் வகையில், 8 மணிநேர உழைப்பு, 8 மணி நேர ஓய்வு, 8 மணிநேர உறக்கம் என்ற கோரிக்கைக்காக மே தினம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் தற்போதைய சூழலில் ஆட்டோ உள்ளிட்ட இத்தகைய பணிகளை மேற்கொண்டு வருபவர்களுக்கு இத்தகைய வாய்ப்பு கிடைப்பதில்லை. இருப்பினும் குடும்பச்சூழல் காரணமாக ஒவ்வொரு நாளும் உழைப்பாளர் தினம் என்ற அடிப்படையில் எங்களது பணிகளை மனப்பூர்வமாக செய்து வருகின்றோம்.தொழிலாளர்களுக்கு திட்டங்கள் வேண்டும்மூக்கையா,சலவைத் தொழிலாளி, மானாமதுரை: ஒவ்வொரு ஆண்டும்மே முதல் நாள் உழைக்கும் தொழிலாளர்களின் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.உழைக்கும் தொழிலாளர்களின் ஓய்வுக்காக இந்த ஒரு நாள் விடுமுறை தினமாக்கப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக 80 சதவீத தொழிலாளர்கள் வேலையில்லாமல் உணவுக்கும்,உடைக்கும்,உரிமைகளுக்கும் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். மெல்ல,மெல்ல கொரோனா பிடியிலிருந்து தொழிலாளர்கள் மீண்டு வருகின்ற நிலையில் தொழிலாளர்களாகிய எங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் பல புதிய திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.

தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றும் வகையில் ஓய்வூதியத்திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த முன்வர வேண்டும்.தள்ளு வண்டி இழுக்கும் தொழிலாளிஇப்ராகிம், இந்திரா நகர், திருப்புல்லாணி: அனைத்து நாளும் எங்கள்நாளே எங்களைப்போன்ற சுமைதூக்கும் மற்றும் தள்ளுவண்டி தொழிலாளர்களுக்கு வருடத்தின் எல்லா நாட்களும் மே ஒன்றாக தான் தெரிகிறது. உழைப்பின் மகத்துவத்தை உணர்ந்து உழைத்தால் அது நம்மை மேன்மைப்படுத்தும். தொழிலாளியின் நெற்றியில் வழியும் வியர்வை காய்வதற்கு முன்பாக அதற்குரிய ஊதியத்தை சம்பந்தப்பட்டவர்கள் வழங்கிட முன்வர வேண்டும்.கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் பனியிலும், பெய்யும் மழையிலும் அன்றாடம் உழைக்கும்வர்க்கத்தினரின் நிலைமையை உணர்ந்து அவர்களுக்கான உரிய கூலியை கொடுக்க முன் வர வேண்டும். நியாயமான கூலியை கேட்கும் நேரத்தில் அதில் பேரம் பேசுவதால் சிரமத்திற்குள்ளாகிறோம்.

உழைப்பின் மகத்துவத்தை போற்றுவோம், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவோம், என்ற எண்ணம் பொதுமக்களிடையே தோன்றினாலே போதும்.அரசு உதவ வேண்டும்க.நாககுமார், மாற்றுத்திறனாளி, முதுகுளத்துார்: மாற்றுத்திறனாளி ஆனதால் எந்த வேலைக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டு வந்தேன். இந்நிலையில் மூன்று சக்கரம் டூவீலர் வாங்கி ஆட்டோ போல் தயார் செய்து கோயில், கடைகளில் விளம்பரம் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்ந்து வருகிறேன். போதுமான வருமானம்கிடைக்காமல் இருந்தாலும்மகிழ்ச்சியாக உள்ளது.எனவே அரசு சார்ந்த திட்டங்களை பொதுமக்களுக்கு விளம்பரம் செய்வதற்கு அரசு உதவ வேண்டும். என்னைபோன்ற மாற்றுத்திறனாளி தொழிலாளிகளுக்கு சுயதொழில் ஏற்படுத்தி வாழ்வாதாரம் மேம்பட அரசு முன்வர வேண்டும்.தகுதியான ஊதியம் வேண்டும்இ.அஜ்மீர்கான், பேக்கரி தொழிலாளர், திருவாடானை: தொழிலாளர்களின் நலனைக் காக்கும் விதமாகவும், உழைக்கும் தொழிலாளர்களுக்கு கவுரவத்தை ஏற்படுத்தும் விதமாகவும், மே 1ல் தொழிலாளர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இது தொழிலாளர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். கடந்த சில ஆண்டுகளாக, தமிழகத்திற்கு வருகை தரும், வட மாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இந்தத் தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி சில முதலாளிகள், பல மணி நேரம் வேலை வாங்கி விட்டு, குறைந்த ஊதியம் வழங்கி வருகின்றனர். வேறு வழியின்றி, வயிற்றுப் பிழைப்புக்காக குறைந்த ஊதியத்திற்கு அதிக வேலை செய்யும் நிலையில், வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வரும் நிலை தமிழகத்தில், இன்று தொடர்ந்த வண்ணம் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.

அனைத்து தொழிலாளர்களுக்கும், உழைப்புக்கேற்ற சமமான ஊதியம் வழங்க முதலாளிகள் முன்வர வேண்டும்.உழைப்பாளருக்கு பெருமிதம் தரும் நாள்எஸ்.ராமகிருஷ்ணன், தொழிலாளி, 48 காலனி, சிவகங்கை: தொழிலாளர்கள் தினம் எங்களுக்கு தரும் மரியாதை நாளாக கருதுகிறோம். உழைப்பால் உயர்ந்த பல தலைவர்களை முன்னுதாரணமாக கொண்டு தொழிலாளர்கள் இன்றைக்கும் உழைத்து வருகின்றனர். இன்றையபல முதலாளிகள் தங்கள் வாழ்க்கையை தொழிலாளராக தான் துவக்கியுள்ளனர். நாட்டின் வளர்ச்சிக்கு மனித வளம் மிக முக்கியம்.

மனிதவளம் சிறப்பாக இயங்கினால் தான் நாடு பொருளாதார வளர்ச்சி பெறும். இப்பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக தொழிலாளர்கள் இருப்பது பெருமை தான். இன்னும் மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர்களின் வளர்ச்சிக்கான நவீன திட்டங்களை வகுத்து தர வேண்டும், என்றார்.உழைப்புக்கு ஏற்ற ஊதியம்ராஜகோபால், லோடுமேன், காரைக்குடி: உழைப்பாளர்களின் உரிமைகளை மீட்டெடுத்த தினமாக மே 1 உலக உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இது, உழைப்பார்களுக்கு கிடைத்த நம்பிக்கையும் பெருமையும் ஆகும்.

நான் 10 ஆண்டுகளாக லோடுமேன் வேலை செய்து வருகின்றேன். ஆரம்பத்தில் மிக கடினமாகவே இருந்தது. கடினமான உடல் உழைப்பு என்றாலும், நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வருகிறோம். எத்தனையோ கடுமையான, நேர்மையான உழைப்பாளிகள் தான் இன்று பல இடங்களில் முதலாளிகளாக மாறியுள்ளனர்.

நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி வேலை செய்யும் உழைப்பாளர்கள் அனைவருக்கும் உழைப்புக்கேற்ற ஊதியம்கிடைக்க வேண்டும். தொழிலாளர்கள் இல்லாமல் இந்த உலகச் சக்கரம் சுழலாது. உழைப்பாளர்களின் வாழ்வு முன்னேற்றம் பெற அரசு பல நல்ல திட்டங்களை கொண்டுவர வேண்டும்.விலைவாசி உயர்வால் வேலைகள் குறைவுபொன்சேகர், வெல்டிங் தொழில், தேவகோட்டை: உழைப்பாளர் தினம் கொண்டாட்டம் தான் நடக்கிறது. ஆனால் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமை திருப்தியாக இல்லை.

சில மாதங்களுக்கு முன், டீசல் விலை உயர்வுக்கு முன்பே கட்டுமான பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்தது. சிறிதாவது குறையும் என்று நினைத்தோம். தற்போது டீசல் விலை உயர்வால் இரும்பு விலையும் கூடியுள்ளது. இதனால் இரும்பு வேலைகள் குறைவாக வருகிறது.

கட்டட பணிகள் அதிகளவு நடந்தது. இதன் காரணமாக வாரம் முழுவதும் வேலைகள் பார்த்தோம். கட்டட பணிகள் குறிப்பாக வீட்டு பணிகள் விலைவாசி உயர்வால் குறைந்ததால் சில நாட்கள் வேலையே கிடைப்பதில்லை. பெரிய ஆலைகளில் பணிபுரிவருக்கு மாத சம்பளம் வந்து விடுகிறது.

தினச்சம்பளம், எண்ணிக்கை அடிப்படையில் பணியாற்றும் உழைப்பிற்கேற்ற வருமானம் கிடைக்க வில்லை. தற்போது மின்தட்டுப்பாடு காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் பணி முடிக்க முடியாததால் தொழிலாளர்கள் பாதிக்கிறார்கள். வருமானம் குறைகிறது. அரசு விலைவாசியை குறைத்தால் பணிகள் தீவிரம் அடையும்.அரசு எங்களை கவனிக்கலாம்வேலம்மாள், செருப்பு தைக்கும் தொழிலாளி, திருப்புத்துார்: நாங்கள் இந்த இடத்தில்பரம்பரை, பரம்பரையாக செருப்பு தைக்கும் தொழில் செய்கிறோம்.

பழைய செருப்பைத்தான் தைக்கிறோம். 5க்கும் 10க்கும் கஷ்டப்படுகிறோம். இங்குள்ள மரத்தடியியில் பல தலைமுறையாக தொழில் செய்கிறோம். ஆரம்பமும் இதுதான், முடிவும் இது தான் என்றாகி விட்டது.

ஆனால் எந்த அரசாங்கமும்எங்களை கவனிக்கவில்லை. எங்களுக்கு ஒரு சிறு பெட்டி வைத்து எங்க பொருட்களை வைக்க உதவி செய்தால் நல்லது. தொழிலாளர்களை நினைக்கிற நேரத்தில அரசாங்கம் இதை செய்யக் கூடாதா.கவுரவத்தை வழங்க வேண்டும்ஏ.ராஜ்குமார், டீக்கடை தொழிலாளி எஸ்.புதுார்: உழைப்பே உயர்வு தரும். உழைத்து சாப்பிடும் போது கிடைக்கும் சந்தோஷம் வேறு எதிலும் கிடைப்பதில்லை.

உழைப்பின் மூலம் உழைப்பாளிகள் தேசத்திற்கு சேவையை தான் வழங்குகிறார்கள். உழைப்பாளிகள் என்ற சக்கரத்தில் தான் தேசம் என்ற தேர் ஓடுகிறது. உழைப்பாளிகளின் தியாகத்தை மக்கள் அங்கீகரிக்க வேண்டும். உழைக்கும் வர்க்கத்தினருக்கான கூலியை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் அவர்களிடம் பேரம் பேசக்கூடாது. உழைப்பாளிகள் பெரும்பாலும் கவுரவமாகவே வாழ விரும்புவார்கள். அவர்களுக்கான கவுரவத்தை மக்களும் அரசும் வழங்க வேண்டும்.
மே 1: இன்று உழைப்பாளர்கள் தினம்

related_post