dark_mode
Image
  • Friday, 07 March 2025

புதிய கடைகள் திறப்பதை தாமதித்த ரிலையன்ஸ், டி மார்ட், டாடா – செலவுக் கட்டுப்பாட்டில் விற்பனை நிறுவனங்கள்

புதிய கடைகள் திறப்பதை தாமதித்த ரிலையன்ஸ், டி மார்ட், டாடா – செலவுக் கட்டுப்பாட்டில் விற்பனை நிறுவனங்கள்

சென்னையில் செயல்பட்டு வரும் முன்னணி சங்கிலித் தொடர் சில்லரை விற்பனை நிறுவனங்கள், செலவுகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக புதிய கடைகள் திறப்பதைத் தாமதிக்கின்றன. 2024ம் ஆண்டில், ரிலையன்ஸ் ரீடெயில், டி மார்ட், டாடா டிரெண்ட் உள்ளிட்ட 12 முக்கிய நிறுவனங்கள் புதிய கடைகள் திறப்பதில் முக்கியமான மாற்றங்களை மேற்கொண்டுள்ளன. கடந்த ஆண்டு தினசரி சராசரியாக 10 புதிய கடைகள் திறக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அது மூன்றாக குறைந்துள்ளது.

 

சில்லரை விற்பனைத் துறையில் காலணி, ஆடை, நகை மற்றும் துரித உணவுப் பிரிவுகளில் விற்பனை குறைந்ததன் காரணமாக, நிறுவனங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த ஆண்டில் மட்டும் நாட்டின் முக்கிய விற்பனை நிறுவனங்கள் மொத்த கடைகள் எண்ணிக்கையை 3% அதிகரித்து 34,839 ஆக உயர்த்தியிருந்தாலும், புதிய கடைகள் திறப்பு வீதம் சரிவை கண்டுள்ளது.

 

வியாபார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக பல நிறுவனங்கள் லாபமில்லா கடைகளை மூடுவதிலும் கவனம் செலுத்தி வருகின்றன. பாட்டா இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் குஞ்சன் ஷா, "நிகர சேர்க்கைகள் குறைவாகவே உள்ளன. அதற்காக புதிய கடைகளை முழுமையாகக் கைவிடவில்லை. கடந்த 6-9 மாதங்களாக லாபமில்லா கடைகளை மூடிவருகிறோம். இந்த நிலை இன்னும் ஒரு காலாண்டு நீடிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

 

இந்திய சில்லரை விற்பனையாளர்கள் சங்கம் வெளியிட்ட தகவலின்படி, ஆடைகள், காலணிகள், அழகு சாதனங்கள் மற்றும் துரித உணவுப் பிரிவுகளில் விற்பனை வளர்ச்சி 2022ல் 15% ஆக இருந்த நிலையில், 2024ல் அது நடுத்தர ஒற்றை இலக்கமாக (6-9%) குறைந்துள்ளது. இதன் விளைவாக, பெரும்பாலான நிறுவனங்கள் செலவுகளை கட்டுப்படுத்துவதற்காக கடைகளை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்த போக்கு தொடரும் என விற்பனைத் துறையினர் கணிக்கின்றனர்.

 

செய்தியாளர். மு. கார்த்திக், புதிய தலைமைச்செய்தி

 

comment / reply_from

related_post