மேட்டூர் அணை முழுவதும் நிரம்பியது : காவிரி ஆற்றில் எகிறி அடிக்கும் நீர்வரத்து.. வினாடிக்கு எவ்ளோ கன அடி தெரியுமா?

கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் மே மாதம் இறுதியில் இருந்து தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கர்நாடகாவின் மைசூரு, தலைக்காவேரி உளிட்ட பகுதிகளிலும் கேரளாவின் வயநாடு உள்ளிட்ட காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவின் காவிரி படுகையில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பும் தருவாயை எட்டின. இதனையடுத்து பாதுகாப்பு கருதி இரு அணைகளில் இருந்தும் உபரி நீர் அதிகளவில் திறக்கப்பட்டது.
குறிப்பாக கபினி அணை தனது முழுக் கொள்ளவை எட்டிய நிலையிலும் 26,193 கன அடி தண்ணீர் வந்துகொண்டுள்ளது. இதனால் அணையில் இருந்து 30,000 கன அடி தண்ணீர் தொடர்ச்சியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. கிருஷ்ண ராஜ சாகர் அணை இன்று காலை நிலவரப்படி மொத்தமாக தனது முழுக் கொள்ளளவை எட்டியது. இதனால் மொத்தமாக 46,501 கன அடி தண்ணீர் வரும் நிலையில், 21,463 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
கர்நாடக அணைகளில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் பிலிகுண்டுலு மற்றும் ஒகேனக்கல் வழியாக தமிழகம் வந்தடைந்தது. அங்கிருந்து சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வந்து சேர்கிறது. நேற்று முன் தினம் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. ஆனால், தொடர்ச்சியாக நீர்வரத்து உயர்ந்து நேற்று மாலை வினாடிக்கு 80,000 கன அடியாக அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வை சந்தித்தது.
120 அடி உயரமுள்ள மேட்டூர் அணை இன்று காலை நிலவரப்படி 119.22 அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு 92.23 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. அணைக்கான நீர்வரத்து 68007 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 26000 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் பிற்பகல் 3.30 மணிக்கு மேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரித்து முழுக் கொள்ளளவை எட்டியது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
முன்னதாக நீர்வரத்து அதிகரித்த நிலையில் மேட்டூர் அணை நீர்வளத் துறை உதவிப் பொறியாளர் செல்வராஜ் சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் ஆகிய 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தார். முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், காவிரி கரையோரம் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது
மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் 50,000 முதல் 75 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வரும் தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது காவிரி டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர். காவிரியில் தற்போதே அதிகப்படியான தண்ணீர் வருவது விவசாயிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.