முதலீட்டாளர்கள் மாநாடு ஒப்பந்தம்; 43 சதவீத முதலீடுகள் மட்டுமே வந்துள்ளன!

சென்னை: தமிழகத்தில், 2024 ஜனவரியில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் வாயிலாக, 43 சதவீத முதலீடுகள் மட்டுமே வந்துள்ளன.
தமிழகத்தில் தொழில் முதலீட்டை ஈர்க்க, 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு நடத்தியது. இதில், பல்வேறு துறைகளுக்கு, 6.64 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், பெரிய நிறுவனங்களுடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை சார்பில், 5,068 நிறுவனங்கள் வாயிலாக, 63,573 கோடி ரூபாய்க்கு, முதலீடுகளை ஈர்க்க ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.
அந்த நிறுவனங்கள் தொழில் துவங்குவதை கண்காணிக்கவும், அவற்றுக்கு தேவைப்படும் அரசு துறைகளின் அனுமதி, வங்கிக்கடன் போன்றவற்றை விரைவாக பெற்று தரவும், மண்டல அளவில், தனி கண்காணிப்பு அதிகாரியை, சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை நியமித்தது. மேலும், மண்டல வாரியாக கூட்டங்கள் நடத்தப்பட்டு, தொழில் துறையினரின் கருத்துகள் கேட்கப்பட்டன.
இதன் விளைவாக, தற்போது வரை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததில், 2,610 நிறுவனங்கள், 27,312 கோடி ரூபாய் முதலீட்டில் ஆலைகளை அமைத்து உற்பத்தியை துவக்கி உள்ளன; 1.05 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளன. புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட முதலீட்டில், 43 சதவீதம் வந்துள்ளன.
இது குறித்து, சிறு, குறு, நடுத்தர நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சிறு நிறுவனங்கள் தொழில் துவங்க தேவைப்படும் அனைத்து உதவிகளும், மாவட்ட தொழில் மையங்கள் வாயிலாக வழங்கப்படுகின்றன. 'புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குள், 2,610 நிறுவனங்கள் தொழில் துவங்கியுள்ள நிலையில், மீதமுள்ள நிறுவனங்களும் விரைந்து தொழில் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.