திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.17 கோடி 73 லட்சம் ஊழல் – முன்னாள் கமிஷனர் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு

திண்டுக்கல் மாநகராட்சியில் பல ஆண்டுகளாக நடைபெற்ற நிதி முறைகேடுகள் தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் தற்போது பெரிய அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
2015-16 முதல் 2018-19 வரை திண்டுக்கல் மாநகராட்சியில் நடந்த வருவாய் மற்றும் செலவினங்களை துணை இயக்குநர் தலைமையில் தணிக்கை செய்யப்பட்டது. அந்த தணிக்கையில், பல்வேறு நிதி பிரிவுகளில் கோடிக்கணக்கான ரூபாய்கள் முறைகேடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
அதில், வருவாய் மற்றும் முதலீட்டு நிதி, குடிநீர் வழங்கல் நிதி, பாதாள சாக்கடை நிதி, தொடக்க கல்வி நிதி உள்ளிட்ட பல பிரிவுகளில் மொத்தம் ரூ.17 கோடியே 73 லட்சம் 16 ஆயிரத்து 820 ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஆவணங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முறைகேட்டில் அப்போதைய திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மனோகர் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதோடு, மாநகராட்சி துணை வருவாய் அலுவலர் சாரங்க சரவணனும் இதில் தொடர்புடையவராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
விசாரணையில், திண்டுக்கல் மாநகராட்சி வார்டு 1 முதல் 12 வரை சொத்து வரி வசூல் தொடர்பான முறைகேட்டில் மட்டும் ரூ.18 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும், குப்பை தொட்டிகள் கொள்முதல் செய்வதிலும் மோசடி நடந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த சுசி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வழங்கிய 137 குப்பை தொட்டிகள், உண்மையில் ரூ.19,834 மதிப்புள்ளன. ஆனால் அவற்றை ரூ.37,750 என அதிக விலையில் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த முறைகேடுகள் தொடர்பாக, திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு துறை DSP நாகராஜ் தலைமையிலான போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் மொத்தம் ஆறு பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள்:
1. திண்டுக்கல் மாநகராட்சி முன்னாள் ஆணையர் மனோகர்
2. முன்னாள் மாநகராட்சி துணை வருவாய் அலுவலர் சாரங்க சரவணன்
3. முன்னாள் மாநகராட்சி நிர்வாக பொறியாளர் கணேசன் (ஓய்வு)
4. முன்னாள் மாநகராட்சி உதவி பொறியாளர் மாரியப்பன்
5. மாநகராட்சி உதவி பொறியாளர் சுவாமிநாதன்
6. சென்னை அம்பத்தூர் சுசி இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் நாகராஜன்
இவர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, தற்போது தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொத்தத்தில், அரசு நிதிகளை துஷ்பிரயோகம் செய்து, பல்வேறு துறைகளில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பது உறுதியானதாக தெரிகிறது.
இந்த ஊழல் தொடர்பாக அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்களிடமும் பெரும் அதிருப்தி நிலவுகிறது. “மாநகராட்சி மட்டத்தில் கூட இவ்வளவு பெரிய அளவில் ஊழல் நடந்தால், மக்களுக்கு சேவை எவ்வாறு சென்றடையும்?” என்ற கேள்வி எழுந்துள்ளது.
விசாரணை முடிவில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆர்.அழகு பாண்டியன்