dark_mode
Image
  • Wednesday, 23 July 2025

முதல்வர் ஸ்டாலினுக்கு பலகட்ட பரிசோதனை

முதல்வர் ஸ்டாலினுக்கு பலகட்ட பரிசோதனை

முதல்வர் ஸ்டாலினுக்கு, அப்பல்லோ மருத்துவமனையில், பலகட்ட பரிசோதனை செய்யப் பட்டுள்ளது.

தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின், தினமும் காலை நடைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று முன்தினம் காலை நடைபயிற்சி சென்றபோது, அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டது.

எனவே, மருத்துவ பரிசோதனைக்காக, சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு, பல கட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டன.

அவருக்கு மேலும் சில பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதாலும், டாக்டர்கள் ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தி இருப்பதாலும், அவர் மருத்துவமனையில் மூன்று நாட்கள் ஓய்வில் இருப்பார் என, மருத்துவமனை நிர்வாகம் நேற்று முன்தினம் இரவு அறிவித்தது.

இந்தச் சூழ்நிலையில், முதல்வரின் உடல் பரிசோதனைக்காக சென்னை ஆயிரம்விளக்கு அப்பல்லோ மருத்துவ மனையில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு, அவரது காரில் நேற்று காலை அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு வழக்கமான பரிசோதனை முடிந்த நிலையில், மீண்டும் ஆயிரம்விளக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு திரும்பினார்.

பின், மருத்துவ கண்காணிப்பில் இருந்தபடியே, வழக்கமான அலுவல் பணியை முதல்வர் மேற்கொண்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வயது மூப்பு போன்ற காரணங்களால் ஏற்படும் பாதிப்புக்காக, பல்வேறு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

பரிசோதனை முடிவுகள் வந்தபின், பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாதபட்சத்தில், ஓரிரு நாட்களில் முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்புவார் என, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

மருத்துவமனையில் உள்ள முதல்வர் ஸ்டாலினை, அவரது அண்ணன் அழகிரி நேற்று காலை சந்தித்து நலம் விசாரித்தார்.

துணை முதல்வர் உதய நிதி நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “முதல்வர் நலமுடன் உள்ளார். சில மருத்துவ பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளன. மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் விரைவில் வீடு திரும்புவார்,” என்றார்.

related_post