
முதல்வர் பழனிசாமியின் சொத்து மதிப்பு எவ்வளவு..?
2016ஆம் ஆண்டை விட முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது அவரின் வேட்புமனு விவரங்கள் மூலமாக தெரியவந்துள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் 7வது முறையாகப் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை இன்று தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சமர்பித்தார். இந்த நிலையில் முதல்வரின் வேட்புமனு விவரங்கள் வெளியாகியுள்ளது.
அதில் தன் மீது குற்ற வழக்குகள் எதுவும் இல்லை என முதல்வர் உறுதியளித்துள்ளார். கையில் ரொக்கமாக ரூ.6 லட்சம் இருப்பதாகவும், ஓவர்சீஸ் வங்கியின் சென்னை தலைமைச் செயலக கிளையில் ரூ.25,36,601 இருப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சூரமங்கலம் கனரா வங்கியில் தேர்தல் செலவுகளுக்கான ஆரம்பிக்கப்பட்ட கணக்கில் 12,02,941 ரூபாய் உள்ளது.
தொழில் என்னும் இடத்தில் விவசாயம் என்றும், வருவாய் ஆதாரம் விவசாயத்திலிருந்தே வருவதாகவும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார். இதேபோல ரூ. 47,64,542.31 அசையும் சொத்துக்கள் முதல்வருக்கு இருப்பதாகவும், அவரது மனைவி ராதாவுக்கு 1,04,11,631.93 ரூபாயும், குடும்பத்தின் சொத்து மதிப்பாக 50,21,096 ரூபாயாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் பெயரில் அசையா சொத்துக்கள் எதுவுமில்லை. அவரது மனைவி ராதா பெயரில் 1,78,00,000 ரூபாய்க்கும், குடும்பத்தின் பெயரில் 2,90,40,000 ரூபாயும் அசையா சொத்துக்கள் உள்ளன. ஈரோடு வாசவிக் கல்லூரியில் பி.எஸ்சி கல்லூரிப் படிப்பை படித்ததாகவும், தேர்ச்சி பெறவில்லை என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.