dark_mode
Image
  • Thursday, 24 September 2026

மாணவர்களை கௌரவிக்க மீண்டும் தவெக கல்வி விருது விழா; ஆயத்தப் பணிகளை தொடங்க உத்தரவிட்ட முதல்வர் விஜய்

மாணவர்களை கௌரவிக்க மீண்டும் தவெக கல்வி விருது விழா; ஆயத்தப் பணிகளை தொடங்க உத்தரவிட்ட முதல்வர் விஜய்

சென்னை: தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உயர்கல்வி சேர்க்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கல்வி விருது வழங்கும் விழா இந்த ஆண்டும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை உடனடியாகத் தொடங்குமாறு தவெக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய், கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று, அண்மையில் நடைபெற்ற 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்து கௌரவிப்பதே இந்த விழாவின் முக்கிய நோக்கமாகக் கூறப்படுகிறது.

இதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த தகுதியான மாணவர்களின் முழுமையான விவரங்களை உடனடியாகச் சேகரிக்குமாறு கட்சி நிர்வாகிகளுக்கு தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தவெக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, மாணவர்களை நேரில் சந்தித்து பாராட்டும் முதல் மிகப்பெரிய பொது நிகழ்ச்சியாக இது அமையவுள்ளது என்பதால் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மேலும், விழாவில் பங்கேற்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கான அடிப்படை வசதிகள், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆரம்பகட்ட பணிகளையும் தவெக தலைமை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, கல்வி விருது வழங்கும் விழா நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

related_post