மன்னிப்பு கேட்க மாட்டேன்: சொல்கிறார் கமல்

திருவனந்தபுரம்: '' தமிழில் இருந்து தான் கன்னடம் தோன்றியது என்ற கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்,'' என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல் கூறியுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல் நடிப்பில் உருவான 'தக்லைப்' படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இதற்கான 'புரோமோஷன்' நிகழ்ச்சிகளில் கமல் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் நடந்த பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர்,' தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது,' என்றார்
கமலின் இந்த பேச்சுக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியது. கன்னட மொழிக்கு என்று வரலாறு உள்ளது. அது கமலுக்கு தெரியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறினார்.
அமைச்சர் சிவராஜ் கூறுகையில், கமல் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவரது படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதேபோல், கமலின் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மாநில பா.ஜ., தலைவர் அசோகாவும் கூறினார்.
இந்நிலையில் கேரளாவில் நடந்த புரோமோஷன் நிகழ்ச்சியில் கமல் பேசியதாவது: கன்னடம் குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன். அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது. நான் சொன்ன கருத்தை எனது பக்கம் இருந்து பார்த்தால் சரியாக இருக்கும். நான் சொன்னதை உங்கள் பக்கம் இருந்து பார்த்தால் தவறாக தோன்றும்.
கன்னடம், குறித்து நான் சொன்னது அன்பினால் மட்டுமே. ஏராளமான வரலாற்று ஆசிரியர்கள் எனக்கு மொழிப்பாடம் எடுத்தனர். தமிழகத்தில் தான் 'மேனன்' முதல்வராக இருந்தார். 'ரெட்டியும்' , ' கன்னட ஐயங்காரும்' தமிழகத்தில் முதல்வராக இருந்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்தவரும் முதல்வராக இருந்துள்ளார். நான் உட்பட, எந்த அரசியல்வாதியும் மொழி குறித்து பேச தகுதிபெறவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.