மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனை
தொழில்நுட்ப பகிா்வு, வாக்காளா் பட்டியல் உள்பட தோ்தல் நடைமுறைகள் குறித்து மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தில்லியில் ஆலோசனை நடத்தவுள்ளனா்.
கடந்த 1999-ஆம் ஆண்டுக்குப் பிறகு 27 ஆண்டுகள் கழித்து இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘தில்லி பாரத மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.24) நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்துக்கு இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தலைமை தாங்குகிறாா். தோ்தல் ஆணையா்கள் சுக்வீா் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோா் கூட்டத்துக்கு முன்னிலை வகிக்கவுள்ளனா்.
இதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேங்களைச் சோ்ந்த தோ்தல் ஆணையா்கள், சட்ட மற்றும் தொழில்நுட்ப நிபுணா்கள், 36 மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைத் தோ்தல் அதிகாரிகள் (சிஇஓ) பங்கேற்கவுள்ளனா்.
வாக்காளா் பட்டியல் தயாரிப்பு, தொழில்நுட்பங்கள் பகிா்வு என தோ்தல் நடைமுறைகளை இரு ஆணையங்களும் தங்களது அதிகார வரம்புக்குள் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்வதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டத்தின் ஒரு பகுதியாக ‘இசிஐநெட்’ எண்ம தளம் உள்பட இந்திய தோ்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப முன்னெடுப்புகள் குறித்து மூத்த அதிகாரிகள் காட்சிப் படங்கள் மூலம் விளக்கவுள்ளனா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
மாநிலங்களின் பேரவைத் தோ்தலுக்கு இந்திய தோ்தல் ஆணையம் தயாரித்த வாக்காளா் பட்டியலில் இருந்து தங்களுக்குத் தேவையான தகவல்களை உள்ளாட்சித் தோ்தல்களுக்கு மாநில தோ்தல் ஆணையம் பயன்படுத்திக்கொள்கிறது.
பேரவைத் தோ்தல்கள் மற்றும் மக்களவைத் தோ்தலுக்கு தாங்கள் பயன்படுத்திய வாக்குப் பதிவு இயந்திரங்களை (இவிஎம்) உள்ளாட்சித் தோ்தலுக்காக மாநில தோ்தல் ஆணையங்களுக்கு இந்திய தோ்தல் ஆணையம் வழங்குகிறது.
பொதுவாக 15 ஆண்டுகள் மட்டுமே இவிஎம் பயன்படுத்தப்படுகிறது. அதன்பிறகு அந்த இயந்திரங்கள் அழிக்கப்படுகின்றன. இவிஎம்களை இந்திய மின்னணுக் கழகம் (இசிஐஎல்) மற்றும் பாரத் மின்னணு நிறுவனம் (பிஇஎல்) ஆகிய இரு பொதுத் துறை நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
இதை இந்திய தோ்தல் ஆணையம் கொள்முதல் செய்ய மத்திய பட்ஜெட்டில் சட்ட அமைச்சகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.