மனைவி சொன்னா கேட்டுக்கணும்; முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சென்னை: ''என் வெற்றிக்கு பின்னாலும் என் மனைவிதான். மணமக்களிடம் நான் கேட்பது என்னவென்றால், பொண்டாட்டி சொன்னால் கேட்டுக் கொள்ள வேண்டும்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொளத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கொளத்துாருக்கு வந்தாலே ஒரு எனர்ஜி வந்து விடும். ஒரு உற்சாகம் வந்து விடும். வேகம் வந்துவிடும். ஒரு புத்துணர்ச்சி வந்து விடும். அது எனக்கு மட்டுமல்ல. அது உங்களுக்கும் தெரியும். அதிலும் மணவிழா இது. மணமக்களுடன் நாம் பங்கேற்று அவர்களை வாழ்த்தும் விழாவாக இந்த விழா நடந்து கொண்டிருக்கிறது. நம் குடும்பத்தில் ஒரு திருமண விழா நடந்தால் மகிழ்ச்சியுடன் பங்கேற்பதை போல, நான் மட்டும் அல்ல, அமைச்சர்கள் மட்டுமல்ல அனைவரும் அந்த உணர்வோடு தான் பங்கேற்றுள்ளோம்.
நல்ல எண்ணத்தில்...!
யாராவது கொளத்துார் என பெயர் சொன்னாலே, அது சாதனை; இல்லையென்றால் ஸ்டாலின் என்றே ஞாபகத்திற்கு வரும். அந்த அளவுக்கு இந்த தொகுதியில் நான் இரண்டற கலந்துள்ளேன். ஏராளமான திட்டங்களை இந்த தொகுதியில் நிறைவேற்றி, இந்த கொளத்துார் தொகுதியை நேரு சொன்னது போல் பெருமையாக மாற்றியுள்ளோம். அவர், 234 தொகுதியில் இந்த தொகுதியை பார்க்கும் போது எங்களுக்கு பெருமையாக உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது, பொறாமையாகவும் உள்ளது என்றார். அது கெட்ட எண்ணத்தில் அல்ல, நல்ல எண்ணத்தில் தான். அவர்களும் அவர்களின் தொகுதியில் சிறப்பாக செயல்பட இந்த கொளத்துார் தொகுதி ஊக்கமளிக்கிறது.
செல்லப்பிள்ளை
என்ன தான், நான் முதல்வராக இருந்து பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம், பொது நிகழ்ச்சி, அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்றால் தரும் மகிழ்ச்சியை விட, இந்த கொளத்துார் தொகுதியில் பெறும் மகிழ்ச்சியே சிறப்பு. எப்போதுமே நான் அடிக்கடி சொல்வதுண்டு. இந்த தொகுதியை பொறுத்தவரை எப்போதும் நான் உங்கள் வீட்டு பிள்ளையாக செல்லப்பிள்ளையாக நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அப்படித்தான் இருக்கிறன் என நான் நம்புகிறேன். நீங்கள் அந்த எண்ணத்துடன் தான் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். இந்த தொகுதியில் ஏற்படுத்தியுள்ள திட்டங்களை பார்க்கும் போது, இன்று மட்டுமல்ல என்றைக்குமே மக்கள் மனதில் பதியும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்.
சிறப்பு உண்டு
கொளத்துாருக்கு ஒரு சிறப்பு உண்டு, மாநகராட்சி பள்ளி, மருத்துவமனை, நுாலகம், திருமண விழா என எல்லாமே கொளத்துாரில் தான் அதிகம். எதை எடுத்தாலும் நாம் தான் அதிகம். அந்தளவு நம் திட்டங்களை சாதனைகளை இந்த தொகுதியில் செயல்படுத்தியுள்ளோம். இனறு 15 திருமண தம்பதிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கிறோம். நம் ஆட்சி வந்த பின் பெண்களுக்கு தான் அதிக திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். பெண்களை முன்னேற்றினால் அந்த குடும்பம் சிறப்பாக இருக்கும். பெண்கள் நினைத்தால் எதையும் செய்வர். அதனால் தான் பெண்களுக்கு முக்கியத்துவம் தருகிறோம். ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் தான் இருப்பர்.
மனைவி சொன்னால்...!
என் வெற்றிக்கு பின்னாலும் என் மனைவிதான். மணமக்களிடம் நான் கேட்பது என்னவென்றால், பொண்டாட்டி சொன்னால் கேட்டுக் கொள்ள வேண்டும் என்பதே. அந்த வகையில் வாழ்க்கையை நீங்கள் சிறப்பாக நடத்த வேண்டும். அழகான குழந்தைகளை பெற்று எடுக்க உள்ளீர்கள் அதற்காக அவசரப்பட வேண்டாம். பொறுமையாக இருங்கள். முன்பு 16 பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்பர்.
ஆனால் தற்போது அளவோடு பெற்று வளமோடு வாழுங்கள் என்கிறேன். முன் நாம் இருவர்; நமக்கு ஒருவர். படிப்படியாக குறைந்து, நாம் இருவர் நமக்கு ஒருவர். வருங்காலத்தில் நாம் இருவர் நமக்கு ஏன் ஒருவர் என்று மாறலாம். 16 பெற வேண்டும் எனு்பதை மணமக்கள் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது. அது 16 செல்வங்களை குறிக்கும். குழந்தைக்கு தமிழ் பெயர்களை சூட்டி, வீட்டுக்கு விளக்காய் நாட்டுக்கு தொண்டனாய் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முதல்வர் பேட்டி
சென்னை கொளத்தூரில் நிருபர்கள் சந்திப்பில், ''100 நாள் வேலைத்திட்டத்திற்கு மாற்றான மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்'' என்றார்.
கேள்வி: மடிக்கணினி வழங்கப்படும் என்ற வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கூறியுள்ளாரே?
முதல்வர் ஸ்டாலின் பதில்: பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக செயல்படாமல், எதிரிக்கட்சி தலைவராக செயல்படுகிறார், அதான் உண்மை.
இவ்வாறு அவர் கூறினார்.