பெங்களூரிலும் கன மழை! இயல்பு வாழ்க்கை முடக்கம்
பெங்களூரு மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று(அக். 16) காலை 8.30 மணி தொடங்கி அடுத்த 24 மணி நேரத்தில், மிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து பெங்களூரில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐ.டி. ஊழியர்கள் அலுவலகங்களுக்கு செல்லாமல் வீட்டிலிருந்தே பணியாற்றவும் கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது.
கர்நாடகத்தில் பரவலாக இன்று பலத்த மழை பெய்து வரும் நிலையில், பெங்களூரு கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தின் அருகாமையில் அமைந்துள்ள ஃபீனிக்ஸ் வணிக வளாகத்தில் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளது.
புதன்கிழமை(அக்.16) காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில், கர்நாடகத்தில் அதிகபட்சமாக பெங்களூரு(நகர்ப்புறம்) மாவட்டத்தில் 153 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாகவும், உடுப்பி மாவட்டத்தில் 103.5 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாகவும் கர்நாடக மாநில இயற்கைப் பேரிடர் கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மழை காரணமாக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவிருந்த இந்தியா - நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டுள்ளது.
மேலும், தெற்கு கர்நாடகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் நாளையும்(அக்.17) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கர்நாடக மாநில இயற்கைப் பேரிடர் கண்காணிப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடகத்தில் வால்மீகி ஜெயந்தியையொட்டி வியாழக்கிழமை(அக்.17) பொது விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.