அலட்சிய அதிகாரிகளால் 5,000 அவமதிப்பு வழக்கு ஐகோர்ட் வேதனை

சென்னை: நீதிமன்ற உத்தரவுகளை அரசு அதிகாரிகள் நிறைவேற்றாததால், 5,000 அவமதிப்பு வழக்குகள் வரை நிலுவையில் உள்ளதாக தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், 'அதிகாரிகளின் அலட்சிய செயல்பாடுகளால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது' என, வேதனை தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சங்கர் ஷா, சுந்தர் ஷா, கபாலீஸ்வர் ஷா. இவர்களுக்கு சொந்தமான நிலத்தை, தமிழக அரசு கையகப்படுத்தியது.
அதற்கான இழப்பீட்டை உயர்த்தி வழங்குவது தொடர்பாக, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றவில்லை எனக்கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில், நில உரிமையாளர்கள், அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு, நீதிபதி பி.வேல்முருகன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'நீதிமன்ற உத்தரவை, அரசு அதிகாரி நிறைவேற்றாதது ஏன்' என, நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு, 'வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் அதிகாரி ஈடுபட்டிருந்தார்' என, அரசு தரப்பில் காரணம் சொல்லப்பட்டது.
நீதிபதி கூறியதாவது:
எல்லா நேரமும் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணிகளை தான் மேற்கொண்டு வருகிறாரா?, நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாததால், உயர் நீதிமன்றத்தில் மட்டும், 5,000க்கும் மேற்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நீதிமன்றத்தில் தாக்கலாகும் வழக்குகளில், அரசு அதிகாரிகள் தொடர்புடைய வழக்குகளில், 60 சதவீத நேரமும், அரசியல்வாதிகள் தொடர்புடைய வழக்குகளில், 25 சதவீத நேரமும் செலவிடப்படுகிறது.
பொதுமக்களுக்கான வழக்குகள் விசாரணைக்கு வெறும், 7 சதவீத நேரத்தை மட்டுமே, நீதிமன்றம் செலவிடுகிறது. நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளால் தான் நீதிமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு பணி செய்வதுதான் தங்கள் கடமை என்பதையே, அரசு அதிகாரிகள் மறந்து விட்டனர். அலட்சியமாக செயல்படும் அதிகாரிகளால் தான், நீதிமன்றங்களின் பணிச்சுமை அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி, அரசுக்கும் அவப்பெயரை பெற்றுத் தருகின்றனர்.
பணிச்சுமை, நேரமின்மை எனக்கூறி, பணி, கடமையில் இருந்து அதிகாரிகள் விலகிச் செல்ல முடியாது.
அதிகாரிகள் தங்கள் பணிகளை சரியாக செய்தால், மக்கள் தங்கள் பணத்தை விரயம் செய்து, நிவாரணம் கோரி ஏன் நீதிமன்றத்தை நாடப் போகின்றனர்? இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி மீது கருணை காட்ட வேண்டும் என, கோரப்பட்டது. இதை நீதிமன்றம் ஏற்கும்பட்சத்தில், நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கையை பொதுமக்கள் இழந்து விடுவர்.
இவ்வாறு நீதிபதி கூறினார்.
வழக்கின் விசாரணையை ஜூன் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description