பாணிபூரியை முதலில் செய்தவர் திரௌபதியா? வைரலாகும் சுவாரஸ்யக் கதை... உண்மை என்ன?
டெல்லி: இந்தியா முழுவதும் தெருவோர உணவுகளில் தனி இடம்பிடித்துள்ள பாணிபூரி, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஸ்னாக்ஸாக உள்ளது. ஆனால், இந்த பாணிபூரியை முதன்முதலில் உருவாக்கியது மகாபாரதத்தில் வரும் திரௌபதி என்ற தகவல் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.
பாணிபூரியின் தோற்றம் குறித்து பல்வேறு கதைகள் பரவி வரும் நிலையில், அவற்றில் மிகவும் பிரபலமானது மகாபாரதத்துடன் தொடர்புடைய புராணக் கதை. இந்தக் கதை அமர் சித்ர கதா உள்ளிட்ட சில வெளியீடுகளில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதற்கு உறுதியான வரலாற்று ஆதாரங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புராணக் கதையின்படி, திருமணத்திற்குப் பிறகு தனது மருமகள் திரௌபதியின் சமையல் திறனைச் சோதிக்க பாண்டவர்களின் தாயார் குந்தி தேவி, மிகக் குறைந்த அளவு கோதுமை மாவும், சிறிதளவு உருளைக்கிழங்கு மசாலாவும் வழங்கியதாக கூறப்படுகிறது. அந்தப் பொருட்களைக் கொண்டு ஐந்து பாண்டவர்களின் பசியையும் தீர்க்க வேண்டும் என்று அவர் கூறியதாக நம்பப்படுகிறது.
அதற்கு திரௌபதி சிறிய உருண்டைகளாக மாவை உருட்டி எண்ணெயில் பொரித்து, அதன் உள்ளே உருளைக்கிழங்கு மசாலாவை நிரப்பி பரிமாறியதாகவும், அதுவே பின்னர் பாணிபூரியாக மாறியதாகவும் அந்தக் கதையில் குறிப்பிடப்படுகிறது. அவரது புத்திசாலித்தனத்தைப் பாராட்டிய குந்தி தேவி, இந்த உணவு தலைமுறைகள் கடந்தும் நிலைத்திருக்கும் என்று ஆசீர்வதித்ததாகவும் கூறப்படுகிறது.
எனினும், உணவு வரலாற்று ஆய்வாளர்கள் இந்தக் கதையை புராண மரபில் கூறப்படும் ஒரு சுவாரஸ்யமான தகவலாகவே கருதுகின்றனர். பாணிபூரியின் உண்மையான தோற்றம் குறித்து உறுதியான வரலாற்றுப் பதிவுகள் எதுவும் இல்லை. சில ஆய்வுகள், இந்த உணவு கிழக்கு இந்தியாவின் மகதப் பகுதியில் தோன்றி, அப்போது 'புல்கி' என்ற பெயரில் அறியப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றன.
இன்று இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் பாணிபூரி வெவ்வேறு பெயர்களில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் 'பாணிபூரி', வட இந்தியாவில் 'கோல்கப்பா', மேற்கு வங்கத்தில் 'புச்கா' என பல்வேறு பெயர்களில் பிரபலமாக உள்ளது.
எனவே, பாணிபூரியை முதலில் உருவாக்கியது திரௌபதியா அல்லது வேறு யாரா என்பது குறித்து உறுதியான ஆதாரங்கள் இல்லாவிட்டாலும், இந்த சுவையான தெருவோர உணவு இந்தியர்களின் விருப்பமான உணவுப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாகும்.