குமரி மண்ணின் சகாப்தம் " சைலேந்திர பாபு "
தமிழ்நாடு காவல்துறையின் புதிய தலைமை இயக்குநராக முனைவர் சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. உணவு, உடற்பயிற்சி என தினமும் புத்துணர்ச்சியோடு வலம் வரும் சைலேந்திர பாபு, இணைய உலகில் தனக்கென ஒரு பெரும் கூட்டத்தையே வைத்திருக்கிறார். டி.ஜி.பி பதவி வரையில் சைலேந்திர பாபு உயர்ந்தது எப்படி?
11 பட்டியல்!
தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநராக இருக்கும் ஜே.கே.திரிபாதியின் பதவிக் காலம் வரும் 30 ஆம் தேதியோடு நிறைவடைகிறது. இதையடுத்து, `புதிய டி.ஜி.பி யார்?' என்ற கேள்வி, தமிழ்நாடு காவல்துறை வட்டாரத்தில் வலம் வந்தது.
இந்தப் பட்டியலில் தற்போது ரயில்வே டி.ஜி.பியாக இருக்கும் சைலேந்திர பாபு, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் டி.ஜி.பியான கரன் சின்ஹா, எல்லை பாதுகாப்புப் படையின் டி.ஜி.பியான சஞ்சய் அரோரா, சிறைத்துறை டி.ஜி.பியாக இருக்கும் சுனில்குமார் சிங், சி.பி.சி.ஐ.டி டி.ஜி.பியான ஷகீல் அக்தர், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் டி.ஜி.பியான கந்தசாமி உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களைத் தவிர பிரதீப் வி பிலிப் உள்பட மேலும் சிலரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.
காவல்துறையில் பணிமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படும் இந்தப் பதவிக்குத் தகுதியான 11 பேரின் பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்குத் தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது.
இதற்காக கடந்த வாரம் டெல்லியில் நடந்த ஆலோசனைக் குழு கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு அளிக்கும் பட்டியலில் இருந்து ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டு அதில் ஒருவர் டி.ஜி.பியாக நியமனம் செய்யப்படுவார். அந்த வகையில் தமிழ்நாடு அரசின் காவல்துறை தலைமை இயக்குநராக சைலேந்திர பாபு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
யார் இந்த சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்?
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறையில் கடந்த 1962 ஆம் ஆண்டு பிறந்த சைலேந்திர பாபு, அரசுப் பள்ளியில் தனது படிப்பை நிறைவு செய்தார். இவரது தந்தை இந்திய ராணுவத்தின் கப்பல் பிரிவில் பணியில் இருந்துள்ளார். பின்னர், கேரள போக்குவரத்துத் துறையில் பணிபுரிந்துள்ளதாகவும் பேட்டி ஒன்றில் சைலேந்திர பாபு குறிப்பிட்டுள்ளார். விவசாயத்தின் மீதுள்ள ஆர்வம் காரணமாக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் விவசாயம் பயின்றுள்ளார். அங்கு படிக்கும்போதுதான் மத்திய அரசுப் பணியாளர் தேர்வினை எழுதி ஐ.பி.எஸ் ஆக தேர்வானார்.
பள்ளியில் படிக்கும் காலத்தில் கற்பித்த ஆசிரியர்களையும் கல்லூரிக்கால ஆசிரியர்களையும் இன்றளவும் நினைவுகூர்வது சைலேந்திர பாபுவின் சிறப்பாக உள்ளது. அதிலும், ஆண்டுக்கொரு முறை குழித்துறை அரசு பள்ளியில் தன்னுடன் படித்த மாணவர்களை சந்திப்பதும் அவரது வழக்கமாக உள்ளது. தமிழ்நாடு வேளாண்மைக் கல்லூரி நடத்தும் `பழைய மாணவர்கள் சந்திப்பு' நிகழ்ச்சிகளிலும் தவறாமல் பங்கேற்பது சைலேந்திர பாபுவின் வழக்கம். `தன்னுடைய ஐ.பி.எஸ் கனவுக்கு வேளாண் கல்லூரி எந்த வகையில் துணை நின்றது?' என்பதையும் பலமுறை வெளிப்படுத்தியுள்ளார்.
தனது 25 வயதில் காவல்துறையில் ஐ.பி.எஸ் ஆக தேர்வான பிறகு ஒன்பதாம் வகுப்பில் ஆசிரியராக இருந்த ராமசாமி என்பவரிடம் ஆசிர்வாதம் வாங்கச் சென்றபோது, அவர் உயிருடன் இல்லாததை வேதனையோடு பதிவு செய்துள்ளார். `என் அப்பாவிடம் கூறி ஆசிர்வாதம் வாங்குவதைவிடவும் அவரிடம் ஆசி பெறுவதை மிக முக்கியமான ஒன்றாகப் பார்த்தேன்' எனவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். `காவல்துறையின் மீது ஈடுபாடு வருவதற்கு பள்ளியில் என்.சி.சி கொடுத்த ஊக்கமும் ஒரு காரணம்' என்கிறார் சைலேந்திர பாபு.
என்கவுன்டர் சர்ச்சை!
இந்திய காவல் பணியில் சேர்ந்த பிறகு கோபிச் செட்டிபாளையத்தில் ஏ.எஸ்.பியாக பணியைத் தொடங்கியவர், சேலம், தருமபுரி, சிவகங்கை, கடலூர், காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார். இவர் கோவை மாநகர ஆணையராக பணிபுரிந்த காலத்தில்தான் சிறுமி முஸ்கன் மற்றும் அவரது சகோதரர் ரித்திக் ஆகியோர் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவமும் நடந்தது.
இதில் தொடர்புடைய மோகன்ராஜ் என்ற குற்றவாளி மீது என்கவுன்ட்டர் நடந்த சம்பவமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவு கிளம்பினாலும், மனித உரிமை ஆர்வலர்கள் நீதிமன்றம் சென்றனர். இவர் சிறைத்துறையில் தலைவராக இருந்த காலகட்டத்தில் சிறைக் கைதிகளுக்கான பல்வேறு நலத் திட்டங்களையும் முன்னெடுத்தார்.
அதேநேரம், உடற்பயிற்சி மீது தீராத காதல் கொண்ட சைலேந்திர பாபு தினமும் சைக்கிளிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். ஆரோக்கியமான உணவுகளை எவ்வாறு எடுத்துக் கொள்வது, எளிமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது எப்படி என இணையத்தில் தினமும் இவர் வெளியிடும் வீடியோக்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு.
அதிலும், ` எந்த உணவையும் சாப்பிடலாம். ஆனால், அளவோடு சாப்பிட வேண்டும். நாம் சாப்பிட்ட பிறகும் பசி இருக்க வேண்டும்' என உணவு தொடர்பாக அறிவுரையும் வழங்குவார். தினமும் காலையில் மிக எளிமையான உணவுகளை எடுத்துக் கொள்வது இவரது வழக்கம். அந்த உணவுகளைப் பற்றிய அவரது சிறு குறிப்பும் வெகு பிரசித்தம்.
சூர்யாவின் ரோல் மாடல்!
இதுதவிர, புத்தகங்களை எழுதுவதும் இவருக்குப் பிடித்தமான ஒன்றாக உள்ளது. `உனக்குள் ஒரு தலைவன்', `சிந்தித்த வேளையில்', `உங்களுக்கான 24 போர் விதிகள்', `அவர்களால் முடியும் என்றால் நம்மாலும் முடியும்', `உடலினை உறுதி செய்', `சாதிக்க ஆசைப்படு' உள்பட ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார்.
`Missing children' என்ற இவரது ஆராய்ச்சிக் கட்டுரைக்காக சென்னைப் பல்கலைக்கழகம் முனைவர் பட்டத்தையும் வழங்கியது. குடியரசுத் தலைவர் விருது, வீரதீர செயலுக்கான தமிழ்நாடு அரசின் விருது, கடமை உணர்வுக்கான தமிழ்நாடு அரசின் விருது என ஏராளமான விருதுகளையும் சைலேந்திர பாபு குவித்துள்ளார்.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான `காக்க காக்க' படத்தின் போலீஸ் அதிகாரி வேடத்தில், சைலேந்திர பாபுவை மனதில் வைத்துக் கொண்டே நடித்ததாக பின்னாளில் நடிகர் சூர்யா தெரிவித்திருந்தார்.
ஏ.எஸ்.பியாக பணியைத் தொடங்கி சிறப்பு அதிரடிப்படைத் தலைவர், காவல்துறை ஆணையாளர், வடக்கு மண்டல காவல்துறை தலைவர், கடலோர காவல் படை ஏ.டி.ஜி.பி, ரயில்வே டி.ஜி.பி எனப் பல பதவிகளை அலங்கரித்த சைலேந்திர பாபு, வரும் ஜூலை ஒன்றாம் தேதி தமிழகத்தின் 30 வது டி.ஜி.பியாக பதவியேற்க இருக்கிறார்.
" இவரை வாழ்த்துவதில் புதியதலைமைச்செய்தி ( PTS NEWS ) பெருமிதம்கொள்கிறது "