dark_mode
Image
  • Saturday, 28 March 2026

தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் மூடல்

தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் மூடல்

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலை சீராகவும் அமைதியாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் முழு வீச்சில் ஈடுபட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை பணிகளுக்கான முன்னேற்பாடுகளை வேகமாக செய்து வருகிறது. வாக்குப்பெட்டிகள் தயார் நிலையில் வைத்தல், அரசு ஊழியர்களை பணியில் அமர்த்தல், மத்திய பாதுகாப்பு படையினரை நியமித்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதைத் தடுக்க பறக்கும் படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. சட்டம் ஒழுங்கை உறுதி செய்ய மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், தேர்தல் நடைமுறைகளின் ஒரு பகுதியாக மதுபான விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்குப்பதிவுக்கு முன்பாக 48 மணி நேரமும், வாக்கு எண்ணிக்கை நாளும் சேர்த்து மொத்தம் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.

அதன்படி, ஏப்ரல் 21, 22, 23 ஆகிய தேதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4ஆம் தேதியிலும் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் செயல்படாது.

மேலும், ஹோட்டல்கள் மற்றும் பிற இடங்களில் இயங்கும் மதுக்கூடங்களும் இந்த நாட்களில் மூடப்பட வேண்டும். அதேபோல், மதுபான விற்பனை மற்றும் மாநிலத்திற்குள் மது பாட்டில்கள் கடத்தல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் மூலம் தேர்தல் காலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், வாக்குப்பதிவு சீராக நடைபெறவும் தேர்தல் ஆணையம் உறுதி செய்கிறது.

related_post