dark_mode
Image
  • Sunday, 22 March 2026

வாக்குச்சாவடி பணியில் தவறில்லாமல்.! – தேர்தல் அலுவலர்களுக்கு விரிவான வழிகாட்டி

வாக்குச்சாவடி பணியில் தவறில்லாமல்.! – தேர்தல் அலுவலர்களுக்கு விரிவான வழிகாட்டி

எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய நடைமுறைகள் குறித்து விரிவான வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் பணிகள் சீராக நடைபெற, அலுவலர்கள் வாக்குச்சாவடிக்கு முதல்நாளே சென்று, ஒதுக்கப்பட்ட மையம் சரியானதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மின்சாரம், விசிறி, மேஜை, நாற்காலி போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) சரியாக வந்துள்ளதா, அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும். ஜன்னல், கதவுகள் பாதுகாப்பாக மூடப்பட்டுள்ளனவா என்பதும் முக்கியம்.

பணியில் ஈடுபடும் மற்ற அலுவலர்கள் அனைவரும் வந்துள்ளார்களா என உறுதி செய்து, யாரேனும் வராதிருந்தால் உடனடியாக மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வாக்குச்சாவடியில் அமரும் முறையும் ஒழுங்காக அமைக்கப்பட வேண்டும்.

வாக்காளர்களுக்கான குடிநீர், கழிவறை, மாற்றுத்திறனாளிகளுக்கான ரேம்ப் போன்ற அடிப்படை வசதிகளும் உறுதி செய்யப்பட வேண்டும். வாக்குச்சாவடி சுற்றுப்புறம் சுத்தமாக இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன், கட்சி முகவர்களை அடையாளம் கண்டு கையொப்பம் பெற வேண்டும். மாதிரி வாக்குப்பதிவை நடத்தி காட்டிய பின், அதிகாரப்பூர்வமாக வாக்குப்பதிவை தொடங்க வேண்டும்.

வாக்குப்பதிவு நடைபெறும் போது, நேரம் தவறாமல் பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வாக்காளர்கள் செல்போன் கொண்டு வராதபடி விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

வாக்குப்பதிவு முடிந்ததும், தேவையான படிவங்கள் அனைத்தும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டு, இயந்திரங்கள் சீல் வைத்து பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட வேண்டும்.

சிறிய விஷயங்களிலும் கவனம் செலுத்தி செயல்பட்டால், தேர்தலை அமைதியான மற்றும் சீரான முறையில் நடத்த முடியும் என்பது அதிகாரிகளின் வலியுறுத்தலாகும்

related_post