ஆன்லைன் அனுமதி இல்லாமல் தவெக கூட்டம் நடத்த முடியாது: தேர்தல் அதிகாரி விளக்கம்
சென்னை: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் முன்னிட்டு அரசியல் கட்சிகள் பிரசார வேகத்தை அதிகரித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நடத்த திட்டமிட்டிருந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.
நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெறவிருந்த இந்த கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் முதற்கட்டமாக 110 வேட்பாளர்களை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்பட்டது. இதனால் கட்சித் தொண்டர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால், தேர்தல் ஆணைய விதிமுறைகள் பின்பற்றப்படாத காரணத்தால் இந்த நிகழ்ச்சி நடைபெறாமல் போனது. குறிப்பாக, அரசியல் கூட்டங்களுக்கு அவசியமான ஆன்லைன் அனுமதி விண்ணப்பம் Suvidha தளத்தின் மூலம் 48 மணி நேரத்திற்கு முன்பாக சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் விளக்கம் அளித்தபோது, “அனுமதி மறுக்கப்படவில்லை. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் கூட்டம் நடத்த முடியாது. நேரில் மனு கொடுத்தாலோ அல்லது ஒரு கடிதம் அளித்தாலோ மட்டும் போதாது. ஆன்லைன் விண்ணப்பம் கட்டாயம்” என்றார்.
மேலும், தேவையான அனைத்து ஆவணங்களும் முறையாக சமர்ப்பிக்கப்பட்டால் உடனடியாக அனுமதி வழங்கப்படும் என்றும், அரசியல் கட்சிகள் தேர்தல் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதன் காரணமாகவே தவெக கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.