திமுகவும், ஆளுநரும் காதலர்கள் போல இருக்கின்றனர், இது என்ன தேனிலவா.. செல்லூர் ராஜூ அட்டாக்
ஆளுநர் ரவிக்கு கெட்அவுட் என்று ஹேஷ்டேக் போட்டு எதிர்ப்பு காட்டியது திமுக. அதேபோல திமுக அரசு எதை செய்தாலும் அதற்கு ரவி முட்டு கட்டையாக இருந்தார்.
சமீபகாலமாக திமுக அரசு, ஆளுநர் ரவி இணக்கமான உறவில் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் திமுகவும், ஆளுநரும் புது காதலர்கள போல செயல்படுவதாக செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், ஆளுநர்களை வைத்து ஆளுங்கட்சிகளுக்கு குடைச்சல் கொடுப்பது பாஜகவின் வழக்கம். அந்த வகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, திமுக அரசு மோதல் போக்கில் ஈடுபட்டு வந்தனர். பல விவகாரங்களில் ஆளுநரும், அரசும் எதிரும் புதிருமாக மோதிக் கொண்டிருந்தனர்.
அமைச்சர் பொன்முடி, உயர் கல்வித் துறையில் இருந்தபோது நேரடியாகவே ஆளுநர் ரவியுடன் மோதலில் ஈடுபட்டார். ஆனால் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் நிகழ்ச்சியில் இருந்து திமுக - பாஜக ரகசிய கூட்டணி அமைத்திருப்பதாக அதிமுக குற்றம் சாட்டி வருகிறது. செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளிவந்தபோதும் இதே புகார் சொல்லப்பட்டது.
சமீபத்தில் உயர் கல்வித் துறை அமைச்சராக பதவியேற்ற கோவி.செழியன், ஆளுநருடன் மோதல் போக்கில் ஈடுபட மாட்டோம் என்று கூறியிருந்தார். இது திமுகவுக்குள்ளேயே பல்வேறு விவாதங்களை கிளப்பியது. இந்நிலையில் மழை நிவாரணப் பணிகளில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுவதாக ஆளுநர் ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த விவாதங்களுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இத்தனை நாட்களாக மல்லுகட்டிக் கொண்டிருந்த ஆளுநரும், திமுகவும் மாறி மாறி புகழ்வது அவர்களின் மறைமுக கூட்டணியை அம்பலப்படுத்தியுள்ளதாகவே அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் கூறி வருகின்றன.
இந்நிலையில், வீரபாண்டிய கட்டபொம்மனின் 225 ஆவது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ , "திமுகவில் வீண் பேச்சு மட்டுமே இருக்கிறது. அவர்களுக்கு சுய புத்தியும் இல்லை, சொல் புத்தியும் இல்லை. அதிமுக ஆட்சியின்போது மழைகளையும், புயல் முன்னெச்சரிக்கை பணிகளையும், நிவாரணப் பணிகளையும் சிறப்பாக செய்து மக்களின் தேவைகளை நிறைவேற்றினோம். திமுக அரசு மக்களுக்காக எதையும் செய்வதில்லை. மழை காலத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் போட்டோஷூட் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
ஒருநாள் இரவு பெய்த மழைக்கே மதுரை தாங்கவில்லை. அமைச்சரும், மேயரும் மழை பெய்யும் போது களத்துக்கு வராமல், பொறுமையாக மழை நீர் வடிந்த பிறகு வந்த ஆய்வு செய்கின்றனர். திமுக அரசு கமிஷன், கலெக்சனில் மட்டுமே குறியாக உள்ளது. மக்கள் மீது அக்கறை இல்லை. 2026 சட்டசபை தேர்தலில் மக்கள் திமுகவுக்கு உரிய பதிலடி கொடுப்பார்கள்.
வரி மேல் வரி போடுவதைத் தவிர, மதுரை மாநகராட்சி மக்களுக்கு எதையும் செய்யவில்லை, அமைச்சர் மூர்த்தி, அவர் தொகுதியில் மட்டுமே ஆய்வு செய்கிறார். மற்ற பகுதிகளுக்கு அவர் அமைச்சர் இல்லையா.
தற்போது திமுக அரசும், ஆளுநரும் காதலர்கள் போல இணக்கமாக உள்ளனர். புதிய காதலன், புது காதலி போல திமுக அரசும், ஆளுநரும் இருக்கிறார்கள். ஆளுநர் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்று திமுக எதிர்ப்பு காட்டியது. பிறகு முதலமைச்சரும், அமைச்சர்களும் ஆளுநர் தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் திடீரென டெல்லி சென்றார். பிரதமரை சந்தித்தார். உடனே மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.7,500 கோடி ஒதுக்குகிறார்கள். நடப்பதை எல்லாம் பார்க்கும்போது, இது ஏதோ தேனிலவு போல தோன்றுகிறது. ஆளுநர் அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டி மக்களின் குறைகளை எடுத்து சொல்வார். தற்போது அது மாறியுள்ளது என்றார்.