dark_mode
Image
  • Wednesday, 17 June 2026

தமிழக அரசின் வெள்ளை அறிக்கை: தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து தப்பிக்கும் முயற்சி - தங்கம் தென்னரசு விமர்சனம்

தமிழக அரசின் வெள்ளை அறிக்கை: தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து தப்பிக்கும் முயற்சி - தங்கம் தென்னரசு விமர்சனம்

சென்னை: தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை, அரசின் இயலாமையை மறைப்பதற்கும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதற்கான காரணங்களை உருவாக்குவதற்குமான முயற்சியே என முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெள்ளை அறிக்கை வெளியிடும் நடைமுறை தமிழ்நாட்டிற்கு புதியதல்ல என்றும், 2001 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளிலும் இதுபோன்ற அறிக்கைகள் வெளியிடப்பட்டதாகவும் குறிப்பிட்டார். முந்தைய அறிக்கைகள் 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலான நிதிநிலையை விளக்கிய நிலையில், தற்போதைய அறிக்கை கடந்த 5 ஆண்டுகளை மட்டுமே உள்ளடக்கியிருப்பது சந்தேகங்களை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.

மேலும், முந்தைய ஆட்சிக் கால நிதி விவரங்கள் ஏன் சேர்க்கப்படவில்லை என்பதற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அரசின் கடன் மேலாண்மையை விமர்சித்த தங்கம் தென்னரசு, தற்போதைய ஆட்சிக் காலம் முழுமையாக நிறைவடைந்தால் மாநிலத்தின் மொத்தக் கடன் ரூ.20 லட்சம் கோடியை எட்டக்கூடும் என்றார். கடந்த திமுக ஆட்சியில் பெறப்பட்ட சராசரி ஆண்டு கடனை விட குறைவாக தற்போதைய அரசு கடன் பெற்று நிரூபித்தால், தாம் தனது பொறுப்பிலிருந்து விலகத் தயாராக இருப்பதாகவும் சவால் விடுத்தார்.

கவர்னர் உரைக்கு முன்னதாகவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டிருப்பது அரசியல் நோக்கத்துடனான நடவடிக்கை எனக் கூறிய அவர், புதிய திட்டங்கள் குறித்து எதிர்பார்ப்புகளை குறைக்கும் நோக்கமே இதன் பின்னணியில் இருப்பதாக விமர்சித்தார்.

மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் மூலதன முதலீட்டு திட்டங்கள் பல தற்போது முடக்கப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் முந்தைய ஆட்சியின் செயல்பாடுகள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, பரந்தூர் விமான நிலையம் உள்ளிட்ட பல முக்கிய திட்டங்கள் முன்னேற்றமின்றி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல மக்கள் நலத் திட்டங்கள் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றுக்கு இணையான திட்டங்கள் பல மாநிலங்களில் இல்லையெனவும் அவர் கூறினார்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு மிகப்பெரிய நிதி தேவைப்படும் நிலையில், தற்போது அரசு தனது வாக்குறுதிகளை செயல்படுத்த முடியாமல் காரணங்களை முன்வைத்து வருவதாக தங்கம் தென்னரசு குற்றம்சாட்டினார்.

அரசு கடன் பெறுவது தவறல்ல; ஆனால் அந்தக் கடன் மக்கள் நலன் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு பயனுள்ள வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே முக்கியம் என அவர் வலியுறுத்தினார்.

related_post