சென்னையில் மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண வில்லைகள்; ஜூன் 21 முதல் விநியோகம்
சென்னை: சென்னை மாநகரில் வசிக்கும் மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில், மாநகரப் போக்குவரத்து கழகம் இலவச பேருந்து பயண வில்லைகள் வழங்கும் திட்டத்திற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான அடுத்த ஆறு மாத காலத்திற்கான (ஜூலை முதல் டிசம்பர் வரை) இலவச பயண வில்லைகள் ஜூன் 21 முதல் வழங்கப்பட உள்ளன. இந்த வில்லைகள் மூலம் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யும் வசதி கிடைக்கும்.
சென்னையில் உள்ள 40 முக்கிய பேருந்து பணிமனைகள் மற்றும் போக்குவரத்து கழக மையங்களில், தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பயண வில்லைகள் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மூத்த குடிமக்கள், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் இரண்டு சமீபத்திய புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும். புதிய விண்ணப்பதாரர்கள் வயது சான்றிதழையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். அவர்களுக்கு இலவச அடையாள அட்டையுடன் மாதந்தோறும் 10 பயண வில்லைகளும் வழங்கப்படும்.
மேலும், முதியவர்கள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், ஜூலை 31 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, தகுதியுள்ள மூத்த குடிமக்கள் தங்களது அருகிலுள்ள போக்குவரத்து கழக மையங்களில் தேவையான ஆவணங்களுடன் பதிவு செய்து இந்த திட்டத்தின் பயன்களைப் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.