சுறுசுறுப்பாக பணியாற்ற மருத்துவத்துறை காரணம்.. டென்ஷன் குறைந்துவிட்டது.. மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

முதலமைச்சராக சுற்றி, சுழன்று, சுறுசுறுப்பாக பணியாற்றுவதற்கு மருத்துவத் துறை தான் காரணம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கார்டியோபேஸ் 2023 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எனது டென்ஷன் அனைத்தும் குறையும் வகையில் நிகழ்ச்சி அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் கார்டிபேஸ் 2023 நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இந்த நிகழ்ச்சி நிரலில் நான் பேசுவதாக இல்லை. பின்னர் நிச்சயமாக சில நிமிடங்கள் பேச வேண்டும் என்று கேட்டு, பேசுகிறேன்.
இந்த நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளர் விருது தணிகாசலத்திற்கு வழங்கிட வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன் மருத்துவர் செங்குட்டுவன் என்னிடம் வந்து கூறினார். அப்போது அந்த நிகழ்ச்சிக்கு வருவீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நான், நிச்சயம் வருவேன். எந்த நாள், நேரம் மட்டும் என்னிடம் கூறிவிடுங்கள் என்று பதில் கூறினேன்.
என் வாழ்நாளில் பேராசிரியர் தணிகாசலம் கூறியதை ஒருபோதும் தட்டியதே கிடையாது. மருத்துவ அறிவுரைகளானாலும் சரி, அரசியல் சூழ்நிலை, நாட்டு நிலவரம் பற்றி பேசினாலும் சரி.. எதையும் தட்டாமல் நான் ஏற்றுக் கொள்வேன். இந்த வாழ்நாள் சாதனையாளர் விருதை தணிகாசலத்திற்கு கொடுப்பதால், எனக்கு வாழ்நாள் நினைவாக இந்த நிமிடங்கள் அமைந்திருக்கிறது.
எந்த விவகாரமாக இருந்தாலும், நிதானமாக எடுத்துக் கூறும் தன்மை கொண்டவர் பேராசிரியர் தணிகாசலம். இந்த நிகழ்ச்சிக்கு வருகிறேன் என்று தணிகாசலத்திற்கு தெரிந்த போது, என்னிடம் நீங்கள் வர வேண்டும்.. ஏராளமான பணிகள் இருக்கும்.. சிரமப்பட வேண்டும் என்று கூறினார். ஆனால் நான் இந்த நிகழ்ச்சிக்கு வருவதில் எனக்கு எந்த சிரமமும் கிடையாது.
இந்த நிகழ்ச்சிக்கு வருவதுதான் எனக்கு மகிழ்ச்சி, சந்தோஷம். முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் எவ்வளவு நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும், என் மனதில் ஒரு துடிப்பும், டென்ஷனும் இருக்கும். ஆனால், டென்ஷன் எல்லாம் குறையக் கூடிய வகையில் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. தணிகாசலம் தான் எப்போதும் எனக்கு காட் ஃபாதர் என்று கூறுவேன்.
தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சராக நான் சுற்றி, சுழன்று, சுறுசுறுப்பாக பணியாற்றுவதற்கு அவரின் மருத்துவத் துறை தான் காரணம். வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ள தணிகாசலத்திற்கு என் வாழ்த்துகள். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எப்படி வாழ்த்தி இருப்பாரோ, அதே வழியில் நானும் வாழ்த்துகிறேன் என்று தெரிவித்தார்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description