தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா; 'மாஸ்க்' அணிய அரசு அறிவுறுத்தல்

சென்னை : 'தமிழகம், கேரளா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுவதால், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும்' என, பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா பாதிப்பு, 2019ம் ஆண்டு இறுதி முதல், 2023ம் ஆண்டு வரை தீவிர பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவ்வப்போது கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்தாலும், தீவிர பாதிப்பாக இதுவரை மாறவில்லை.
தற்போது, ஹாங்காங், சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படும் நிலையில், இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மத்திய அரசின் தகவல்படி, கொரோனாவால் நாடு முழுதும் 257 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக கேரளாவில் 95 பேர்; தமிழகத்தில் 66 பேர்; மஹாராஷ்டிராவில் 56 பேர்; கர்நாடகாவில் 13 பேர்; புதுச்சேரியில் 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு பரவலாக இருப்பதால், மக்கள் கவலை அடைந்துள்ளனர். கேரளாவில் கொரோனா பாதித்த நபர் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து, தமிழக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளது; ஆனால், தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இல்லை. தற்போது, வீரியம் குறைந்த கொரோனா தொற்று பாதிப்பு தான் உள்ளது. 'ஒமைக்ரான்' வகை வைரஸ் உட்பிரிவுகளான,ஜெ.என்., 1 மற்றும் எக்.இ.சி., ஆகிய தொற்றுகளே காணப்படுகின்றன.
இந்நோயின் தாக்கம் மற்றும் இறப்பின் விகிதம் குறைந்தே காணப்படுகிறது. ஆனாலும், பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், தொற்று தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடித்தல் அவசியம். காய்ச்சல், நுரையீரல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், அருகில் உள்ள டாக்டரை அணுகி, சிகிச்சை பெறுவது அவசியம்.
சென்னையிலும் பாதிப்பு
சென்னையிலும் கொரோனா தொற்று காணப்படுகிறது. குறிப்பாக, தி.நகர், சின்மயா நகர், நடேசன் நகர் ஆகிய பகுதிகளில் கொரோனாவால் சிலர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாகவே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் என்றும், வெளியே யாருக்கும் சொல்ல வேண்டாம் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description