நில உச்சவரம்பு சட்ட விலக்கு பெற பேரம் பேசுவதாக புகார்

கூடுதலாக வைத்திருக்கும் நிலத்தில் தொழில் துவங்க, நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ், '37ஏ' பிரிவில் அனுமதி கேட்பவர்களிடம் லஞ்சம் கேட்பதாக, வருவாய் மற்றும் நில சீர்திருத்த துறை மீது புகார்கள் எழுந்துள்ளன.
இதனால், புதிதாக தொழில் துவங்க மற்றும் ஏற்கனவே உள்ள தொழிலை விரிவாக்கம் செய்ய இருப்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில், நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் தனி நபர், நிறுவனங்கள் வைத்திருக்கும் நிலத்தின் அளவை, 'ஸ்டாண்டர்டு ஏக்கர்' அடிப்படையில் அரசு நிர்ணயம் செய்துள்ளது. இது, இடத்திற்கு இடம் மாறுபடுகிறது.
அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக வைத்திருந்தால், நிலம் வைத்திருப்பவருக்கு 'நோட்டீஸ்' அனுப்பி, கூடுதல் நிலத்தை அரசு கையகப்படுத்தும்.
ஆனால், கூடுதலாக இருக்கும் நிலத்தை புதிதாக தொழில் துவங்க அல்லது ஏற்கனவே உள்ள தொழிலை விரிவாக்கம் செய்ய பயன்படுத்துவதாக இருந்தால், அரசு அந்த நிலத்தை எடுக்காது. நில உச்சவரம்பு சட்டம் பிரிவு, '37ஏ' இதற்கு வழி செய்கிறது. எனினும், இதற்கு நில சீர்திருத்த துறை ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பித்து, அனுமதி பெற வேண்டும்.
இதற்காக விண்ணப்பம் செய்பவர்களிடம், அந்த துறை அதிகாரிகள் பணம் கேட்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து, தொழில், வணிக சங்க பிரதிநிதிகள் கூறியதாவது:
கூடுதலாக உள்ள நிலத்தில் தொழில் துவக்க இருப்பதாக அனுமதி கேட்டால், அதற்கு வருவாய் துறை, நில சீர்திருத்த துறை அதிகாரிகள் பணம் கேட்கின்றனர். பணம் தர மறுத்தால், 'நிலத்தை கையகப்படுத்தி விடுவோம்' என்று நோட்டீஸ் அனுப்பி மிரட்டுகின்றனர்.
இதற்காகவே, சென்னை தலைமை அலுவலகம் மற்றும் கோவையைச் சேர்ந்த சில அதிகாரிகள் கூட்டாக செயல்படுகின்றனர். சமீபத்தில், கோவை, திருப்பூரில் விண்ணப்பித்தவர்களை அழைத்து பேரம் பேசியுள்ளனர். அந்த தகவல் எல்லா இடங்களுக்கும் பரவியுள்ளது. உயரதிகாரிகளிடம் புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. அரசு விசாரணைக்கு உத்தரவிடுவதுடன், விரைவாக அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.
மேலும், நில உச்சவரம்பு சட்டம், '37பி' பிரிவின் கீழ் கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளைகள் போன்றவை நிலம் வாங்குவதற்கு முன், அரசிடம் அனுமதி பெற வேண்டும். இதில் அனுமதி தருவதற்கும் லஞ்சம் கேட்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description