dark_mode
Image
  • Sunday, 25 May 2025

ராகுலுக்கு சிக்கல்: ஜாமினில் வரமுடியாத பிடிவாரன்ட் பிறப்பித்த ஜார்க்கண்ட் கோர்ட்

ராகுலுக்கு சிக்கல்: ஜாமினில் வரமுடியாத பிடிவாரன்ட் பிறப்பித்த ஜார்க்கண்ட் கோர்ட்

ராஞ்சி: காங்கிரஸ் எம்.பி. ராகுலுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்டை ஜார்க்கண்ட் சாய்பாசா நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
 

2018ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் எம்பி., யான ராகுல், அப்போது பா.ஜ., தலைவராக இருந்த அமித் ஷா பற்றி சர்ச்சையான சில விமர்சனங்களை முன் வைத்தார்.

ராகுலின் இந்த பேச்சுக்கு பா.ஜ.,வில் இருந்து கடும் எதிர்ப்பும், கண்டனங்களும் எழுந்தன. இதையடுத்து பா.ஜ.,வின் பிரதாப் கட்டியார் ஜார்க்கண்ட் மாநிலம் சாய்பாசாவில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ராகுலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

பின்னர், ஜார்க்கண்ட் ஐகோர்ட் உத்தரவை அடுத்து, இந்த வழக்கானது 2020ம் ஆண்டு பிப்ரவரியில் ராஞ்சியில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பலமுறை சம்மன் அனுப்பியும், வழக்கில் நேரில் ஆஜராகாமல் ராகுல் இருந்துள்ளார்.

இந் நிலையில், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி ராகுல், சாய்பாசா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், ராகுலுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. ஜூன் 26ம் தேதி நேரில் விசாரணைக்கு வருமாறும் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, 2018ம் ஆண்டு கர்நாடகா தேர்தலின் போது, அமித் ஷா குறித்து ராகுல் சர்ச்சையாக பேசியதாக பா.ஜ., மூத்த தலைவர் விஜய் மிஸ்ரா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சுல்தான்பூர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் வழக்கு விசாரணைக்கு வருவதாக இருந்தது.

ஆனால், வக்கீல்கள் பயிலரங்கு நடந்ததால் அன்றைய தினம், இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

comment / reply_from

related_post