dark_mode
Image
  • Sunday, 24 August 2025
சுயேச்சையாக களமிறங்கும் அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம்

சுயேச்சையாக களமிறங்கும் அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம்

பெருந்துறையில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால், அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் சுயேச்சையாகப் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள பெருந்துறை சட்டசபை தொகுதியில் தற்போது எம்எல்ஏவாக உள்ளவர் தோப்பு வெங்கடாசலம். கடந்த 2011-16 காலகட்டத்தில் அதிமுகவின் பவர்புல்லான அமைச்சர்களில் ஒருவராக வலம்வந்தவர் தோப்பு வெங்கடாசலம்.

இருப்பினும், 2016ஆம் ஆண்டு தேர்தலில் வென்ற பிறகும்கூட இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. பெருந்துறை பகுதியில் இவரது செயல்பாடுகள் மீது அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதால், நடைபெறவுள்ள தேர்தலில் மீண்டும் போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவரது இடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சரை வைத்துப் பார்ப்பதாக உருக்கமாகப் பேசியிருந்தார். மேலும், பெருந்துறை பகுதியில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டும் தனக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

சில நாட்கள் அமைதியாக இருந்த அவர், சுயேச்சையாகக் களமிறங்க முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி இன்று மதியம் தோப்பு வெங்கடாசலம் பெருந்துறை தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

பெருந்துறை தொகுதியில் ஜெயகுமார் என்பவரை அதிமுக வேட்பாளராக அறிவித்துள்ளது. அதேபோல திமுக கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பாலு போட்டியிடுகிறார்.

related_post