dark_mode
Image
  • Friday, 19 June 2026

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி கேள்விகளுக்கு முதல்வர் விஜய் நேரடியாக பதிலளிக்காதது சர்ச்சை

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி கேள்விகளுக்கு முதல்வர் விஜய் நேரடியாக பதிலளிக்காதது சர்ச்சை

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் சூடுபிடித்த நிலையில், சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் நேரடியாக பதிலளிக்காதது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவாதத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மாநிலத்தில் அண்மையில் இடம்பெற்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். உள்துறை பொறுப்பையும் வகிக்கும் முதலமைச்சரே இதற்கு விளக்கம் அளிப்பது வழக்கமாக இருந்தாலும், இம்முறை அவர் பதிலளிக்காதது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு வழிவகுத்தது.

இதற்குப் பதிலாக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகன் சில கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர். ஆனால், முக்கிய கேள்விகளுக்கு நேரடி பதில் கிடைக்கவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர்.

மேலும், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை, விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட ஆளுங்கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் எப்போது செயல்படுத்தப்படும் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. இந்த விவகாரங்களில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளிக்காமல், பிற அமைச்சர்கள் விளக்கம் அளித்ததாக எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டின.

அதேவேளை, விவாதம் ஆளுநர் உரை தொடர்பாக மட்டுமே இருக்க வேண்டும் என்று அமைச்சர்கள் ராஜ்குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் பேச வேண்டிய விஷயங்களை அமைச்சர்கள் நிர்ணயிக்க முடியாது என கடுமையாக பதிலடி கொடுத்தனர்.

இதனிடையே, காவிரி நீர்ப்பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் போது, நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் உரையாற்றாததும் கவனத்தை ஈர்த்துள்ளது.

சட்டப்பேரவையின் தொடக்கக் கூட்டத்திலேயே ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கடும் வாக்குவாதங்கள் அரங்கேறியுள்ள நிலையில், அடுத்தடுத்த நாட்களில் அரசியல் சூழல் மேலும் பரபரப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

related_post