சட்டக்கல்லூரி மாணவர் மீது சிறுநீர் கழித்த போலீஸ்- துறைரீதியான விசாரணைக்கு உத்தரவு
சென்னையில் முகக்கவசம் ஒழுங்காக அணியவில்லை என்பதற்காக சட்டக்கல்லூரி மாணவர் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியதோடு அவரின் முகத்தில் சிறுநீர் கழித்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
சென்னை வியாசர்பாடி புதுநகரை சேர்ந்த அப்துல் ரஹீம் என்ற சட்டக்கல்லூரி மாணவர் கல்லூரியில் படித்துகொண்டே பகுதி நேர வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணியளவில் பணி முடிந்து அவர் வீடு திரும்பும்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, முகக் கவசத்தை ஒழுங்காக அணியாததால் அபராதம் கட்டுமாறு தெரிவித்துள்ளனர். ஆனால் தான் முகக்கவசம் அணிந்திருப்பதால் அபராதம் கட்ட முடியாது என மாணவர் தெரிவித்துள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்படவே மாணவர் ரஹீமை காவல்நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்று அடித்து தாக்கியதுடன் அவரது உடைகளை கலைந்து நிர்வாணப்படுத்தியதாகவும், முகத்தில் சிறுநீர் கழித்ததாகவும் கூறப்படுகிறது.
தன்னை நிர்வாணப்படுத்தி இரவு முழுவதும் காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாகவும், பீரோவில் முட்டி தாக்கியதில் தையல் போடும் அளவுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டதாகவும், தனது முகத்தில் காவல்துறையினர் சிறுநீர் கழித்ததாகவும் மாணவர் புகார் தெரிவித்துள்ளார். இதனிடையே மாணவரை தாக்கியதாக புகாருக்குள்ளான 2 காவலர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேற்கு மண்டல இணை ஆணையர் தலைமையில் துறை ரீதியான விசாரணை நடத்தப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.