கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட தள்ளுபடி திட்டம்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
சென்னை: கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி திட்டத்தை தமிழ்நாடு அரசு விரிவுபடுத்தியுள்ளது. இதன்படி, 01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, முன்னதாக ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திட்டத்தை மறுபரிசீலனை செய்ய கோரிக்கைகள் எழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், வேளாண்மை, கூட்டுறவு, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு திட்டம் குறித்து மறுஆய்வு மேற்கொண்டனர்.
அரசின் நிதிநிலை, நிதி ஆதாரங்கள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் கடன் தள்ளுபடி தொடர்பான வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு, கடந்த நிதியாண்டில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு சுமார் ரூ.5,932.23 கோடி மதிப்பிலான கூடுதல் தள்ளுபடி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் மொத்தம் 14,43,504 விவசாயிகள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்:
-
8,33,773 குறு விவசாயிகளுக்கு ரூ.3,599.67 கோடி,
-
5,16,183 சிறு விவசாயிகளுக்கு ரூ.1,995.41 கோடி,
-
93,548 இதர பெரு விவசாயிகளுக்கு ரூ.337.15 கோடி
மதிப்பிலான தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.
அரசின் மதிப்பீட்டின்படி, கடந்த நிதியாண்டில் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்தபட்சமாக ரூ.35,000 முதல் அதிகபட்சமாக ரூ.75,000 வரை நிதிப் பயன் கிடைக்கும்.
மேலும், இந்த நடவடிக்கை எதிர்வரும் சாகுபடி பருவத்திற்காக புதிய கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் மாநில அரசுக்கு ரூ.5,932.23 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.