கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து… மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

செம்மங்குப்பம் பகுதியில் ரயில்வே கேட்டை மூடாததால் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் கேட் கீப்பர் பங்கஜ் அலட்சியத்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி வேன் ஒன்று ரயில்வே கேட்டை கடப்பதற்காக இன்று காலை வந்துள்ளது. அப்போது ரயில்வே கேட் மூடப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் அந்த வழியாக வந்த விழுப்புரம் - மயிலாடுதுறை ரயிலானது பள்ளி வேன் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
செம்மங்குப்பம் ரயில் பயங்கர விபத்து
இதில் பள்ளி வேன் சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சிகர தகவலை தெரிவித்துள்ளனர். விபத்தில் சிக்கி வேன் கவிழ்ந்ததில் ஓட்டுநர், நடத்துநர், மாணவ, மாணவிகள் பலரும் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களின் புத்தக பைகள் தண்டவாளத்தை ஒட்டி சிதறி கிடந்ததை பார்க்க முடிகிறது. இந்நிலையில் உடனடியாக மாணவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
பள்ளி வேனில் பயணித்த மாணவர்கள் படுகாயம்
ஏராளமான மாணவர்கள் ஒரே சமயத்தில் சிகிச்சைக்காக வந்ததால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவ ஊழியர்கள், மருத்துவர்கள் இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் விபத்து ஏற்பட்டதற்கு காரணமான கேட் கீப்பர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவர் ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் தூங்கியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது சம்பவ இடத்தில் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆய்வு செய்து வருகிறார். ரயில்வே கேட் மூடப்படாததால் ரயில் எதுவும் வரவில்லை என்று நினைத்து ஓட்டுநர் வேனை இயக்கியுள்ளார்.
ரயில்வே கேட் மூடப்படாததால் பெரும் விபத்து
விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் குவிந்தனர். விபத்தில் சிக்கிய வேன் நொறுங்கி கிடக்கின்றன. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே கேட் மூடப்படவில்லை என்பதை ரயில்வே காவல்துறை எஸ்.பியும் உறுதி செய்துள்ளார்
மொத்தம் 4 மாணவர்கள் பயணித்த நிலையில் ஒரு மாணவர், ஒரு மாணவி என இரண்டு பேர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் 6ஆம் வகுப்பில் படித்து வந்ததாக தெரிகிறது. ஒருவர் தொண்டாமநத்தம், மற்றொருவர் சின்னகாரைக்காடு பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் விஷ்வேஸ், செழியன் ஆகிய இருவரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆளில்லா ரயில்வே கேட்களாக மாற்றக் கோரிக்கை
பொதுமக்கள் கடக்கும் வகையிலான ரயில்வே கேட்களை மாற்றிவிட்டு சுரங்க வழித்தடப் பாதைகள் அமைக்கும் பணிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளன. இருப்பினும் அனைத்து இடங்களிலும் இதுபோன்று நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. கடலூர் அருகே இன்று நடந்துள்ள பயங்கர விபத்து ரயில்வே கேட்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று மிகவும் வலுவாக உரைத்திருக்கிறது.
சிக்னல் கிடைக்கவில்லை - ரயில்வே ஊழியர்கள் தகவல்
இந்த சூழலில் மற்றொரு முக்கியமான தகவலும் வெளியாகியுள்ளது. சரியான சிக்னல் கிடைக்காததால் கேட்டை மூடவில்லை என்று ரயில்வே ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அப்படியெனில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில் குமார் தற்போது நேரில் ஆய்வு செய்து வருகிறார்.