குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்காவிட்டால் சிக்கல்.. வெளியான முக்கிய அறிவிப்பு!

இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது (UIDAI) குழந்தைகளின் ஆதாா் அட்டையின் ‘பயோமெட்ரிக்’ விவரங்களை புதுப்பிக்குமாறு பெற்றோர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது (UIDAI) 5 வயது பூா்த்தியடையும் முன்பு பெறப்பட்ட குழந்தைகளின் ஆதாா் அட்டையின் ‘பயோமெட்ரிக்’ (கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம்) விவரங்களை குழந்தைகள் 7 வயதைக் கடந்தவுடன் புதுப்பிக்க உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ”5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் புகைப்படம், பெயா், பிறந்த தேதி, பாலினம், முகவரி மற்றும் பிற ஆவணங்களை சமா்ப்பித்து ஆதாரைப் பெறுகின்றனா். ஆனால் அப்போது அக்குழந்தைகளின் கைரேகை மற்றும் கருவிழி பதிவுகள் பெறப்படுவதில்லை. ஏனெனில் அவை அந்த வயதில் முதிர்ச்சியடையவில்லை.
முதல் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்புபடி (எம்பியு) குழந்தைகள் 5 வயது பூா்த்தி செய்தவுடன் ஆதாரில் அவா்களின் கைரேகை, கருவிழிகள் மற்றும் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்வது கட்டாயமாகும்.
5 வயது முதல் 7 வயது வரை இலவசமாகவே எம்பியு மேற்கொள்ள முடியும். 7 வயதுக்கு மேல் புதுப்பிப்புக் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது. புதுப்பிக்கப்பட்ட பயோமெட்ரிக் கொண்ட ஆதார், பள்ளி சேர்க்கை, நுழைவுத் தேர்வுகளுக்குப் பதிவு செய்தல், உதவித்தொகைகளின் பலன்களைப் பெறுதல், DBT (நேரடிப் பலன் பரிமாற்றம்) திட்டங்கள் போன்ற சேவைகளைப் பெறுவதில் ஆதாரின் தடையற்ற பயன்பாட்டை உறுதி செய்கிறது. ஆகவே பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளின் ஆதார் பயோமெட்ரிக்ஸை முன்னுரிமையின் அடிப்படையில் புதுப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். 7 வயதைக் கடந்த பின்னும் குழந்தைகளின் ‘பயோமெட்ரிக்’ விவரங்களை புதுப்பிக்காவிட்டால் அவா்களின் ஆதாா் முடக்கப்பட வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் மு. கார்த்திக் புதிய தலைமைச் செய்தி