கோவில் நில விவகாரம்: கோர்ட் அவமதிப்பு வழக்கில் 5 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மன்னிப்பு

கடலுாரில் தனியார் பள்ளி வசமுள்ள கோவில் நிலத்தை மீட்க பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததை எதிர்த்து, பா.ஜ., நிர்வாகி தொடர்ந்த, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில், ஐந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆஜராகி மன்னிப்பு கேட்டனர்.
பா.ஜ.,வின் ஆன்மிக மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவின் மாநில செயலர் வினோத் ராகவேந்திரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு: கடலுார் மாவட்டம், கூத்தப்பாக்கம் கிராமத்தில், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 3.40 ஏக்கரில், புனித ஜோசப் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
அந்த நிலம், பல கோடி ரூபாய் மதிப்புள்ளது. அந்த நிலத்தை மீட்க கோரி, கடந்த ஆண்டு பொது நல வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'கடந்த 2019ல் தனி நீதிபதி, ஏற்கனவே இவ்விவகாரத்தில் உத்தரவிட்டுள்ளார். அதை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையை அறநிலையத்துறை விரைவுபடுத்த வேண்டும். கோவில் நிலத்தை மீட்க வேண்டும்' என, உத்தரவிட்டது.
மனு தாக்கல்
இந்த உத்தரவின்படி, கோவில் நிலத்தை மீட்க, உரிய நடவடிக்கை எடுக்காத, தமிழக வருவாய் துறை செயலர் அமுதா, பள்ளி கல்வித்துறை செயலர் மதுமதி, அறநிலையத்துறை செயலர் சந்திரமோகன், அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர், கடலுார் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அறநிலையத்துறை இணை கமிஷனர் பரணிதரன், தேவநாத சுவாமி கோவில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஐந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி சுந்தர்மோகன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, தமிழக வருவாய் துறை செயலர் அமுதா உட்பட அனைவரும் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததற்கு மன்னிப்பு கோரி, மனு தாக்கல் செய்தனர்.
சாலை வசதி
தமிழக அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ''புவனகிரி தாலுகா பெரியப்பட்ட கிராமத்தில், பள்ளிக்கு 4.73 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது,'' என்றார்.
'அந்த இடம் 32 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது. அங்கு சாலை வசதி ஏதுமில்லை. குவாரிகள் செயல்படுகின்றன. எனவே, கடலுார் நகரில் 5 கி.மீ., சுற்றளவுக்குள் நிலம் ஒதுக்கி தர வேண்டும்' என, பள்ளி நிர்வாகம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த கூடுதல் அட்வகேட் ஜெனரல், ''பிரதான சாலையில் இருந்து, அந்த நிலத்துக்கு செல்ல, சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும்,'' என உறுதி அளித்தார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் என்.சுரேஷ் ஆஜராகி, ''நீதிமன்றம் உத்தரவிட்டும், நீண்ட காலமாக நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கோவிலுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு உரிய இழப்பீடை அரசு வழங்க வேண்டும்,'' என்றார்.
இரு தரப்பு வாதங்களை அடுத்து, பள்ளிக்கு வேறு இடம் ஒதுக்கக்கோரி அரசுக்கு விண்ணப்பிக்கும் படி, பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுறுத்திய நீதிபதிகள், அதனை பரிசீலிக்கும்படி, வருவாய் துறை செயலருக்கு உத்தரவிட்டு, ஐ.ஏ.எஸ்., மற்றும் அரசு அதிகாரிகளின் மன்னிப்பை ஏற்று, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தனர்.