dark_mode
Image
  • Wednesday, 16 July 2025

ஜாதி, மத நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜாதி, மத நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

கல்வித்துறையால் அனுமதிக்கப்படாத ஜாதி, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் மாணவர்களை பங்கேற்குமாறு எந்த கல்லுாரியும் கட்டாயப்படுத்தக்கூடாது' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

மதுரை பூமிநாதன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கு: மதுரை திருப்பாலை யாதவா கல்லுாரி, அரசு உதவி பெறும் கல்லுாரி. இங்கு 2024 ஜூலை 11ல் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. தனி நபரை முன்னிலைப்படுத்தி, அவரது படம் அச்சிடப்பட்ட 'டீ-சர்ட்'களை அணியுமாறு மாணவியர் கட்டாயப்படுத்தப்பட்டனர். மாணவர்கள் 'மாவீரன் அழகுமுத்துக்கோன்,' என அச்சிடப்பட்ட 'டீ-சர்ட்'களை அணிந்திருந்தனர்.

கல்லுாரி வளாகத்தில் பேனர்கள், போஸ்டர்கள் இடம் பெற்றிருந்தன. ஒரு தனி நபரை புகழ்வதற்காக மாணவர்களிடம் அமைதி, நல்லிணக்கம் பாதிக்கப்பட்டது. இன்று (ஜூலை 11) அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழா கல்லுாரி வளாகத்தில் நடைபெறுகிறது. எந்த ஒரு தனி நபரையும் ஊக்குவிக்கும் போஸ்டர்கள், பேனர்கள் இடம் பெறக்கூடாது. மாணவர்களின் அமைதி, நல்லிணக்கம் பாதிக்கப்படாதவாறு விழா நடத்த வலியுறுத்தி கல்லுாரிக் கல்வி இயக்குனர், இணை இயக்குனர், திருப்பாலை போலீசாருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஜெசி ஜீவப்பிரியா ஆஜரானார். கல்லுாரி தரப்பு வழக்கறிஞர் ஈ.வி.என்.சிவா: இன்று (ஜூலை 11) கல்லுாரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழாவில் பங்கேற்குமாறு மாணவர்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றார்.

 

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கல்வித்துறையால் அனுமதிக்கப்படாத ஜாதி, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் மாணவர்களை பங்கேற்குமாறு எந்த கல்லுாரியும் கட்டாயப்படுத்தக்கூடாது. கல்லுாரி நிர்வாகம் விடுமுறை அறிவித்திருந்தாலும் மாணவர்களை பங்கேற்குமாறு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கட்டாயப்படுத்தக்கூடாது. இது மாணவர்களின் தனிப்பட்ட விருப்பத்திற்குட்பட்டது.

 

கட்டாயப்படுத்தியது உறுதியானால் கல்லுாரிக்கு வழங்கப்படும் உதவியை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். கல்லுாரி வளாகத்திற்குள் ஜாதிய அடையாளம் சார்ந்த பேனர்கள், போஸ்டர்கள் இடம்பெறக்கூடாது. மீறினால் தகுந்த நடவடிக்கையை போலீசார் மற்றும் உயர்கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

related_post