dark_mode
Image
  • Thursday, 17 July 2025

ஒப்பந்தத்தில் சிக்கிய ஓசூர் விமான நிலைய திட்டம்; தடையில்லா சான்று கிடைத்தால் தான் விமோசனம்

ஒப்பந்தத்தில் சிக்கிய ஓசூர் விமான நிலைய திட்டம்; தடையில்லா சான்று கிடைத்தால் தான் விமோசனம்

பெங்களூரு விமான நிலையம் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் இடையே, 2008ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தால், ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பதில் தமிழக அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நெருக்கடி

தமிழகத்தில், சென்னை, கோவைக்கு பின், தொழில்கள் நிறைந்த நகரமாக ஓசூர் மாறி வருகிறது. தொழில், வணிகம் உள்ளிட்ட காரணங்களுக்காக பலர் வந்து செல்கின்றனர். இப்படி வருபவர்களுக்கு உதவ, பெங்களூரு விமான நிலையம் தான் உள்ளது. ஆனால், பெங்களூரில் இறங்கி, 75 கி.மீ., துாரம் பயணித்து, ஓசூர் வர வேண்டியுள்ளதால் மூன்று மணி நேரம் வரை ஆகிறது.

 

 

 

இதையடுத்து ஓசூரில், 2,000 ஏக்கரில் விமான நிலையம் அமைக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின், கடந்தாண்டு சட்டசபையில் அறிவித்தார். அதன்பின், ஓசூரில் ஏர்போர்ட் அமைக்க இடங்கள் தேர்வு செய்யும் பணிகள் வேகம் எடுத்தன. முதலில் ஐந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில், ஓசூர் கிழக்கில் ஒன்று, தெற்கில் ஒன்று என, இரு இடங்களை தேர்வு செய்து, தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனமான டிட்கோவிடம், ஏ.ஏ.ஐ., எனப்படும் விமான நிலைய ஆணையம் சமர்பித்தது.

 

 

என்னதான் இடங்களை தேர்வு செய்தாலும், தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடியாக, பெங்களூரு விமான நிலையம் மற்றும் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் இணைந்து, கடந்த 2008ல் செய்த ஒப்பந்தம் இருந்து வருகிறது. அந்த ஒப்பந்தத்தில், 'கமர்ஷியல்' காரணத்திற்காக, 25 ஆண்டுகள் அதாவது, 2033 வரை எந்த விமான நிலையமும் பெங்களூரு ஏர்போர்ட்டை சுற்றி, 150 கி.மீ., தொலைவுக்குள் புதிதாக கட்டக் கூடாது என்ற விதிமுறை உள்ளது.

 

இந்த ஒப்பந்தம், தமிழக அரசுக்கு தெரியாமல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி, தமிழக அரசிடம் கருத்தும் கேட்கப்படவில்லை; அரசும் கண்டுகொள்ளவில்லை.

 

புயல் வேகம்

 

இதனால், இடம் கண்டறியும் பணிகள் புயல் வேகத்தில் நடந்தாலும், அடுத்த எட்டு ஆண்டுக்குள், ஓசூர் விமான நிலையம் அமைக்க வாய்ப்பில்லை என்கின்றனர் வல்லுநர்கள். இது குறித்து, விமான போக்குவரத்து வல்லுநர்கள் கூறியதாவது: மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகமும், பெங்களூரு தனியார் விமான நிலைய நிர்வாகமும், 2008ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.

இந்த ஒப்பந்தத்தின்படி, 25 ஆண்டுகளுக்கு பெங்களூரு ஏர்போர்ட்டை சுற்றி, 150 கி.மீ., தொலைவுக்குள் வணிக ரீதியான பயன்பாட்டுக்கு விமான நிலையம் அமைக்க முடியாது.

 

 

வழக்கு தொடரலாம்

 

ஆனால் மைசூரு, ஹாசன் விமான நிலையங்கள் மட்டும் இயங்கலாம். அசுர வளர்ச்சி அடைந்து வரும் ஓசூரில், போதுமான அளவுக்கு நிலங்கள் உள்ளன. அவற்றை தேர்வு செய்து கையகப்படுத்தினாலும், தமிழக அரசுக்கு சிக்கல் ஏற்படும் வகையில் இந்த ஒப்பந்தம் உள்ளது.

தமிழக அரசு நிலம் கண்டறிய துவங்கியபோதே, பெங்களூரு ஏர்போர்ட் தரப்பில் நேரடி யாக அமைச்சகத்திடம் புகார் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தம், தமிழகத்தின் வளர்ச்சியை திட்டுமிட்டு பின்னுக்கு தள்ளும் வகையில் உள்நோக்கத்துடன் போடப்பட்டுள்ளது. தனியார் விமான நிலையத்திற்காக, ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை முடக்கும் வகையில், மத்திய அரசு எப்படி இப்படி ஒரு ஒப்பந்தம் செய்தது என தெரியவில்லை. தமிழக அரசு இடம் தேர்வு செய்து, குறித்த நேரத்தில் பணிகளை துவங்க வேண்டும் என்றால், நேரடியாக மத்திய அமைச்சகத்திடம் பேசி தடையில்லா சான்று வாங்க வேண்டும். இல்லையெனில், ஒப்பந்தத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.

இதிலும் தமிழக அரசு மவுனமாக இருந்தால், ஓசூரில் விமான நிலையம் வருவது கனவாக மாறிவிடும். தனியார் விமான நிலையத்தின் அனுமதிக்காக, அரசு கைகட்டி நிற்பதுபோல ஆகிவிடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

related_post