பயங்கரவாதிகள் பதுங்கிய இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஆய்வு

கோவை தொடர் குண்டுவெடிப்பு மற்றும் ஹிந்து தலைவர்கள் கொலை வழக்கில் கைதான பயங்கரவாதிகள், அபுபக்கர் சித்திக், முகமது அலி மற்றும் டெய்லர் ராஜா பதுங்கி இருந்த இடங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கடந்த 1998ம் ஆண்டு, கோவை தொடர் குண்டுவெடிப்பு, அடுத்தடுத்த ஆண்டுகளில் நடந்த ஹிந்து தலைவர்கள் மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகள், அபுபக்கர் சித்திக், டெய்லர் ராஜா, முகமது அலி ஆகியோரை, தமிழக காவல் துறையின் பயங்கரவாத தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்
இவர்களை, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில போலீசார் உதவியுடன் பிடித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக போலீசாரிடம் இருந்து, பயங்கரவாதிகள் குறித்த தகவல்கள் மற்றும் சில ஆவணங்களை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பெற்று, விசாரணையை துவக்கி உள்ளனர். பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இருந்த வீடுகளிலும் அவர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:
பயங்கரவாதிகள் அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோர், ஆந்திர மாநிலம், கடப்பா அருகே ராயச்சோட்டி என்ற இடத்தில், வெவ்வேறு வீடுகளில் பதுங்கி இருந்துள்ளனர். பயங்கரவாத செயலுக்கு சதி திட்டம் தீட்டி வந்துள்ளனர்.
அபுபக்கர் சித்திக் வீட்டில், வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள், டிஜிட்டல் ஆவணங்கள் ஆகியவற்றை ஆந்திர மாநில போலீசார் ஏற்கனவே பறிமுதல் செய்துள்ளனர்.
கர்நாடகாவில் தங்கி இருந்த டெய்லர் ராஜாவை பார்க்க, அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோர், சிலமுறை அங்கு சென்று வந்துள்ளனர். டெய்லர் ராஜா, தான் பதுங்கி இருந்த இடத்தில், சாதிக் அலி என்ற பெயரில் உலவி வந்துள்ளார்.
மூவரும் தாங்கள் பதுங்கி இருந்த இடங்களில், முஸ்லிம் குடும்பத்தினருடன் இயல்பாக பழகி வந்துள்ளனர்.
இவர்களுக்கு பல்வேறு இடங்களில் இருந்து நிதியுதவி வந்துள்ளது. அதுகுறித்து விசாரணை நடக்கிறது. அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோர் ஒரே ஊரில், வெவ்வேறு இடங்களில் பதுங்கி இருந்தாலும், அடிக்கடி சந்தித்து கொள்வதை தவிர்த்து வந்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.