dark_mode
Image
  • Saturday, 30 August 2025

உச்சநீதிமன்றத்தின் கண்டனம் கேட்கிறதா? கவுரவ விரிவுரையாளர்களுக்கு உடனடியாக அரசு பணி நிலைப்பு வழங்க வேண்டும்!

உச்சநீதிமன்றத்தின் கண்டனம் கேட்கிறதா? கவுரவ விரிவுரையாளர்களுக்கு உடனடியாக அரசு பணி நிலைப்பு வழங்க வேண்டும்!

 

அரசு கல்லூரிகளில் பணியாற்றும் தற்காலிக உதவி பேராசிரியர்களுக்கு, நிரந்தர உதவிப் பேராசிரியர்களுடன் ஒப்பிடும் போது மிகக்குறைந்த அளவில் ஊதியம் வழங்கப்படுவதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஒரே மாதிரியான பணியை செய்யும் ஆசிரியர்களுக்கு பாகுபாடான வகையில் ஊதியம் வழங்கப்படுவது கண்ணியமற்ற செயல் என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கும் நிலையில், இதற்கு காரணமான மாநில அரசுகள் தலைகுனிய வேண்டும்.

 

குஜராத் மாநிலத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மூன்று வகையான உதவிப் பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 2008&ஆம் ஆண்டுக்குப் பிறகு நியமிக்கப்பட்ட நிரந்தர உதவிப் பேராசிரியர்கள், தற்காலிக உதவிப் பேராசிரியர்கள், ஒப்பந்த உதவிப் பேராசிரியர்கள் ஆகிய 3 பிரிவினருக்கும் 2012&ஆம் ஆண்டில் முறையே ரூ.40,412, ரூ.34,000, ரூ.30,000 ஊதியம் வழங்கப்பட்டது. நடப்பாண்டில் நிரந்தர உதவிப் பேராசிரியர்களின் ஊதியம் ரூ.1,36,952 ஆகவும், தற்காலிக உதவிப் பேராசிரியர்களின் ஊதியம் ரூ.1,16,000 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில், ஒப்பந்த உதவிப் பேராசிரியர்களுக்கு இப்போதும் ரூ.30,000 தான் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஊதிய முரண்பாட்டை களையக் கோரி ஒப்பந்த உதவிப் பேராசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் தான் உச்சநீதிமன்றம் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளது.

 

ஆசிரியர்களை பிரம்மா, விஷ்ணு, மஹேஷ்வரா ஆகியோருடன் ஒப்பிட்டு வணங்குவதால் மட்டும் அவர்களுக்கு கண்ணியம் ஏற்பட்டு விடாது; எதிர்காலத் தலைமுறையினரை உருவாக்கும் அவர்களுக்கு கண்ணியமான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. நிரந்தர உதவிப் பேராசிரியர்களுக்கு வழங்கப்படும் அதே ஊதியம் ஒப்பந்த உதவிப் பேராசிரியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று ஆணையிட்ட நீதிபதிகள், இதை 2012&ஆம் ஆண்டிலிருந்து கணக்கிட்டு ஆண்டுக்கு 8% வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என்றும் ஆணையிட்டனர். குஜராத் ஒப்பந்த உதவிப் பேராசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ளத் தீர்ப்பு தமிழகத்திலுள்ள கவுரவ விரிவுரையாளர்களுக்கும் பொருந்தும்.

 

குஜராத் ஒப்பந்த உதவிப் பேராசிரியர்களை விட தமிழகத்தில் உள்ள கவுரவ விரிவுரையாளர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. குஜராத் ஒப்பந்த உதவிப் பேராசிரியர்களுக்கு 2012&ஆம் ஆண்டிலேயே ரூ.30,000 ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால், தமிழக கவுரவ விரிவுரையாளர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன் வெறும் ரூ.10,000 தான் ஊதியம் வழங்கப்பட்டது. பல ஆண்டுகளைக் கடந்து இப்போதும் கூட ரூ.25,000 மட்டும் தான் ஊதியம் வழங்கப்படுகிறது. கவுரவ விரிவுரையாளர்களுக்கு இந்தியாவிலேயே மிகக் குறைந்த ஊதியம் வழங்கும் மாநிலம் தமிழகம் தான். இது தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவு.

 

தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள் இயங்குவதற்கு காரணமே கவுரவ விரிவுரையாளர்கள் தான். மாநிலம் முழுவதும் கல்லூரிகளில் உள்ள 10,500 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 9000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை 8000க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்களை நியமித்து தான் தமிழக அரசு சமாளித்து வருகிறது. பல கல்லூரிகளில் பல துறைகளில் ஒரே ஒரு நிரந்தர உதவிப் பேராசிரியர்கள் இல்லாத நிலையில், அத்துறைகளின் துறைத் தலைவர் பொறுப்புகளையும் கவுரவ விரிவுரையாளர்கள் தான் கவனித்து வருகின்றனர். அவர்களுக்கு ரூ.25,000 மட்டுமே ஊதியம் தரப்படுகிறது.

 

கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஒரு பாடவேளைக்கு ரூ.1500 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.50000 மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு 28.01.2019 ஆம் நாள் ஆணையிட்டது. அதை செயல்படுத்த வேண்டும் என பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், அந்த உத்தரவு செயல்படுத்தப்படாத நிலையில், அதை எதிர்த்து வழக்கில் கடந்த 21.03.2024ஆம் நாள் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் ‘‘கவுரவ விரிவுரையாளர்களுக்கு அரசு வழங்குவது மதிப்பூதியம் அல்ல.... அவமதிப்பூதியம். பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்தவாறு கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்’’ என்று அரசுக்கு ஆணையிட்டது.

 

அதை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாத நிலையில், மீண்டும் தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் 18 ஆம் நாள் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை ரூ.50,000 ஆக உயர்த்துவது குறித்து நவம்பர் 30 ஆம் தேதிக்குள் அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என ஆணையிட்டது. ஆனால், கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை ரூ.50 ஆயிரமாக உயர்த்த முடியாது என்று தமிழக அரசு அறிவித்து விட்டது. கவுரவ விரிவுரையாளர்களை தமிழக அரசு எவ்வளவு கண்ணியக்குறைவாகவும், அவமரியாதையாகவும் நடத்துகிறது என்பதற்கு இதுவே சாட்சி.

 

குஜராத் ஒப்பந்த உதவிப் பேராசிரியர்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கும் கருத்துகள் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். உதவிப் பேராசிரியர்களின் உழைப்புச் சுரண்டல் குறித்த உச்சநீதிமன்றத்தின் கண்டனத்தை தமிழக அரசு மதிக்க வேண்டும். தமிழ்நாட்டில் கவுரவ விரிவுரையாளர்கள் மீது நடத்தப்படும் உழைப்புச் சுரண்டலை திமுக அரசு கைவிட வேண்டும். அவர்களுக்கு உடனடியாக பணி நிலைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

 

செய்தியாளர் மு. கார்த்திக் புதிய தலைமைச் செய்தி

related_post