கச்சத் தீவை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது : விஜய்க்கு இலங்கை அமைச்சர் பதிலடி!

கச்சத் தீவை இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம் என நடிகர் விஜய்க்கு இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் பதில் அளித்துள்ளார்.
வங்கக் கடலில் மீன் பிடிக்க செல்லும் நாகை, ராமேஸ்வரம், புதுக்கோட்டை பகுதி மீனவர்களை இலங்கை கடற்படை யினர் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தடுத்தி நிறுத்தி கைது செய்வது கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. கச்சத் தீவு, நெடுந்தீவு பகுதிகளில் மீன் பிடித்துகொண்டிருந்தாலும் இலங்கை கடற்படை அராஜகத்துடன் கைது செய்து அட்டூழியம் செய்து வருகிறது. இதனால் தமிழக மீனவர்கள் பலரும் தற்போது இலங்கை சிறைகளில் இருப்பதோடு, அவர்களுடைய படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட காலங்களுக்குப் பிறகு மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களுடைய படகுகளை இலங்கை அரசு விடுவிப்பது இல்லை. இதனால் மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.
மீனவர்கள் பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவப் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக இரு நாடுகளும் இணைந்த கூட்டுக் குழுவை அமைத்தால் இந்த பிரச்னை தீரும் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது. ஆனால், இதுநாள் வரை மீனவர்கள் கைது என்பது தொடர்கதையாகவே உள்ளது. இதனிடையே 1974ஆம் ஆண்டு இலங்கைக்கு இந்தியாவால் தாரை வார்க்கப்பட்ட கச்சத் தீவு பகுதியை மீட்க வேண்டும், அப்போதுதான் மீனவர்கள் அச்சமின்றி சுதந்திரமாக மீன் பிடிக்க முடியும் என தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. குறிப்பாக கச்சத் தீவு மீட்பு என்பது தமிழகத்தின் மிகவும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்றாக இருந்து வருகிறது
இந்த நிலையில் தவெகவின் மதுரை மாநாட்டில் பேசிய அதன் தலைவர் விஜய், தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ச்சியாக தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றனர். மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வாக, கச்சத்தீவை மட்டும் மீட்டுக்கொடுங்கள் என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் இலங்கையின் கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத், “முதலாவது கச்சதீவு என்பது இலங்கைக்கு சொந்தமான இலங்கையின் தீவாகும். அது ஒருபோதும் மாறப்போவதில்லை. தென்னிந்தியாவில் இப்போது தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் மேடைகளில் வேட்பாளர்கள் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கு ஒவ்வொரு விஷயங்களைக் கூறுவார்கள். கச்சத் தீவு குறித்து அவர்கள் பேசுவது இது முதல் முறை அல்ல. இதேபோல பலமுறை தேர்தல் மேடைகளில் பேசியுள்ளனர். தேர்தல் மேடைகளில் கூறுவதால் இங்கு மாறப்போவதில்லை. கச்சத்தீவு குறித்து நடிகர் விஜய் தேர்தல் மேடை ஒன்றில் பேசியதைப் பார்த்தேன். அதனை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை.