உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வராவிட்டால்... ரஷ்யாவுக்கு 50 நாள் கெடு விதித்த டிரம்ப்!

உக்ரைன் போரை 50 நாட்களில் முடிவுக்கு கொண்டு வராவிட்டால் ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அதிபர் டொனால்டு டிரம்ப் நிருபர்களிடம் கூறியதாவது: புடினின் போர் நடத்தை ஏமாற்றம் அளிக்கிறது. அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரைன் உடன் போர் நிறுத்தத்திற்கு புடின் ஒப்புக் கொள்ளாவிட்டால் ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும்.நாங்கள் 2ம் கட்ட வரிகளை விதிக்க திட்டமிட்டு வருகிறோம்.
எங்களுடன் ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால் வரி 100 சதவீதம் விதிக்கப்படும். ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனை ஆதரிக்க நேட்டோவிற்கு அமெரிக்கா அனுப்பும் ஆயுதங்களில் பேட்ரியாட் ஏவுகணை அமைப்புகள் மற்றும் பேட்டரிகள் இருக்கும். புடின் அமைதி பற்றிப் பேசினார், ஆனால் உக்ரைன் நகரங்களைத் தொடர்ந்து தாக்கினார். இவ்வாறு டிரம்ப் கூறினார்.
புடினாக இருந்தால்....!
வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தைக்காக, டொனால்டு டிரம்புடன் இணைந்த நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட், ''நான் புடினாக இருந்தால் அமெரிக்க அதிபரின் எச்சரிக்கையைப் பற்றி யோசித்திருப்பேன்'' என்றார்.