இ-ரேஷன் கார்டில் குடும்பத் தலைவர் போட்டோவுக்கு பதில் மது பாட்டில் படம் – அதிர்ச்சியில் குடும்பம்

மதுரை மாவட்டம் சின்னபூலாம்பட்டியை சேர்ந்த தங்கவேல் என்ற நபரின் இ-ரேஷன் கார்டில், குடும்பத் தலைவர் போட்டோவுக்குப் பதிலாக மது பாட்டில் படம் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கவேல் (46) என்பவர் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் மாநில அரசு வழங்கும் பல நலத் திட்டங்களில் பயனாளராக பதிவு செய்வதற்காக, அவரது மனைவி சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது அலுவலர்கள் ரேஷன் கார்டைச் சரிபார்த்தபோது, அதில் குடும்பத் தலைவர் போட்டோவுக்கு பதிலாக மது பாட்டில் படம் இடம்பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில், நலவாரியத்தில் பதிவு செய்ய முடியாது என கூறி அவரது மனைவியை திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் குடும்பம் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது.
தங்கவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கடந்த வாரம் என் மனைவி நலவாரியத்தில் பதிவு செய்வதற்காக சென்றார். அப்போது அதிகாரிகள் எங்கள் இ-ரேஷன் கார்டை பார்த்தபோது, குடும்பத் தலைவர் இடத்தில் எனது போட்டோ இல்லாமல், மது பாட்டில் போட்டோ இருந்தது.
இதைப் பார்த்தவுடன் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இப்படியான கார்டை வைத்து நலத்திட்டத்தில் பதிவு செய்ய முடியாது என்று கூறி, என் மனைவியை திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் நாங்கள் அவமானத்துக்கும் சிரமத்துக்கும் ஆளாகியுள்ளோம்” என்றார்.
அவரும் மேலும் கூறியதாவது: “நாங்கள் இன்னும் புதுப்பிக்கப்பட்ட ரேஷன் கார்டைப் பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இ-கார்டை பதிவிறக்கம் செய்தபோது இப்படி மதுபாட்டில் படம் இருந்தது.
இது எவ்வாறு நிகழ்ந்தது என எங்களுக்கே புரியவில்லை. இது அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக ஏற்பட்ட பிழை என நாங்கள் நம்புகிறோம். உடனடியாக இதனைத் திருத்தி எங்களுக்கு சரியான கார்டை வழங்க வேண்டும்” என்றார்.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடமும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “சாதாரண மக்களுக்கு வழங்கப்படும் நலத் திட்டங்களில் அடிப்படை ஆவணங்களே பிழையுடன் இருந்தால், மக்கள் எந்தவாறு பயன்பெற முடியும்” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
உணவு மற்றும் குடிமை வழங்கல் துறையின் கீழ் செயல்படும் ரேஷன் கார்டு முறைமையில் அடிக்கடி தொழில்நுட்ப பிழைகள் ஏற்படுவதாகவும், அவற்றால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி, உடனடியாக திருத்த நடவடிக்கை எடுப்பார்களா என்பது தற்போது கேள்விக்குறியாக உள்ளது.
மதுரை மாவட்டத்தில் நடந்த இந்தச் சம்பவம், இ-ரேஷன் கார்டு முறைமையின் நம்பகத்தன்மை குறித்து மீண்டும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
ஆர்.அழகு பாண்டியன்