dark_mode
Image
  • Saturday, 21 March 2026

இந்தியாவில் கேஸ் தட்டுப்பாட்டுக்கு தீர்வு: 2 நிமிடத்தில் சிலிண்டர் தரும் “எல்பிஜி ஏடிஎம்” அறிமுகம்.!

இந்தியாவில் கேஸ் தட்டுப்பாட்டுக்கு தீர்வு: 2 நிமிடத்தில் சிலிண்டர் தரும் “எல்பிஜி ஏடிஎம்” அறிமுகம்.!
உலகளவில் இரான்–அமெரிக்கா பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தில் சிக்கல் உருவாகியுள்ளது.

குறிப்பாக ஹார்முஸ் நீரிணை வழியாக வரும் எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.இந்த சூழலில், பொதுமக்களின் அவதியை குறைக்கும் முயற்சியாக பாரத் பெட்ரோலியம் நிறுவனம் ஹரியானா மாநிலத்தின் குருகிராம் நகரில் நாட்டின் முதல் “எல்பிஜி ஏடிஎம்” சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நவீன இயந்திரம் முழுக்க தானியங்கி முறையில் செயல்படும். பயனர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பயன்படுத்தி OTP சரிபார்ப்பு செய்து, QR கோட் மூலம் பணம் செலுத்தினால், 2–3 நிமிடங்களில் காலி சிலிண்டரை மாற்றி புதிய சிலிண்டரைப் பெற முடியும்.மேலும், இந்த ஏடிஎம்களில் வழங்கப்படும் சிலிண்டர்கள் பாரம்பரிய இரும்பு சிலிண்டர்கள் அல்ல. இவை எடை குறைந்த ஃபைபர் கலப்பு சிலிண்டர்கள். சுமார் 15 கிலோ எடை கொண்ட இச்சிலிண்டர்கள் துருப்பிடிக்காதவையாகவும், உள்ளே உள்ள எரிவாயு அளவை நேரடியாக காணக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

24 மணி நேரமும் இயங்கும் இந்த வசதி, நீண்ட நாட்கள் காத்திருக்கும் அவசியத்தை நீக்குகிறது. ஒரே நேரத்தில் பல சிலிண்டர்களை சேமித்து வைத்திருக்கக் கூடிய இந்த இயந்திரம், கையிருப்பு குறைந்தால் தானாகவே எச்சரிக்கையும் அனுப்பும்.இந்த முன்னோடி திட்டம் வெற்றியடைந்தால், விரைவில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் “எல்பிஜி ஏடிஎம்” சேவை விரிவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எரிவாயு விநியோகத்தில் புதிய மாற்றத்தை உருவாக்கும் இந்த முயற்சி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

related_post