இந்தியாவின் நீளமான ரெயில் சேவைக்கு புதிய சாதனை; வருவாயில் முதலிடத்தில் விவேக் எக்ஸ்பிரஸ்
சென்னை: கன்னியாகுமரியிலிருந்து அசாம் மாநிலத்தின் திப்ருகர் வரை இயக்கப்படும் இந்தியாவின் மிக நீண்ட தூர ரெயிலான விவேக் அதிவிரைவு ரெயில், 2025-26 நிதியாண்டில் தெற்கு ரெயில்வேயின் அதிக வருவாய் ஈட்டிய ரெயிலாக உருவெடுத்துள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்ட வருவாய் பட்டியலின்படி, இந்த ரெயில் கடந்த நிதியாண்டில் ரூ.100.57 கோடிக்கும் அதிகமான வருவாயை ஈட்டி முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுமார் 4,158 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் இந்த ரெயில், நாட்டின் தெற்குப் பகுதியை வடகிழக்கு இந்தியாவுடன் இணைக்கும் முக்கிய சேவையாக இருந்து வருகிறது.
ஆரம்பத்தில் வாராந்திர சேவையாக தொடங்கப்பட்ட விவேக் எக்ஸ்பிரஸ், பயணிகளின் அதிக வரவேற்பைத் தொடர்ந்து தற்போது தினசரி ரெயிலாக இயக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் நீண்ட தூரப் பயணிகளின் முதன்மை தேர்வாக இந்த ரெயில் திகழ்கிறது.
குமரி மாவட்ட ரெயில்களும் முன்னிலையில்
தெற்கு ரெயில்வேயின் வருவாய் பட்டியலில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து இயக்கப்படும் பல ரெயில்களும் குறிப்பிடத்தக்க இடங்களைப் பிடித்துள்ளன.
-
நாகர்கோவில் – சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரெயில் ரூ.6.59 கோடி வருவாயுடன் 11-வது இடம்
-
கன்னியாகுமரி – புனே ரெயில் ரூ.5.14 கோடியுடன் 22-வது இடம்
-
கன்னியாகுமரி – பெங்களூரு ரெயில் ரூ.4.04 கோடியுடன் 34-வது இடம்
-
கன்னியாகுமரி – சென்னை எழும்பூர் அதிவிரைவு ரெயில் ரூ.3.76 கோடியுடன் 40-வது இடம்
எனப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
வந்தே பாரத் சேவையை நீட்டிக்க கோரிக்கை
இந்த வருவாய் விவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், தென் மாவட்ட மக்களின் பயணத் தேவைகளை கருத்தில் கொண்டு, தற்போது திருநெல்வேலி மற்றும் மதுரை வரை இயக்கப்படும் வந்தே பாரத் சேவையை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் நல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த கோரிக்கை ஏற்கப்பட்டால், தென் மாவட்ட மக்களின் போக்குவரத்து வசதி மேம்படுவதோடு, தெற்கு ரெயில்வேயின் வருவாயும் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.