dark_mode
Image
  • Friday, 04 July 2025

கும்பகோணம் அருகே சுங்கச் சாவடி செயல்பாட்டுக்கு வந்தது : கட்டண விவரங்கள் இதோ!

கும்பகோணம் அருகே சுங்கச் சாவடி செயல்பாட்டுக்கு வந்தது : கட்டண விவரங்கள் இதோ!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரையிலான 165 கிலோ மீட்டர் சாலையை நான்கு வழிச் சாலையாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்காக 3517 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சாலை அமைக்கும் பணிகள் கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கியது. குறிப்பாக விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு வரை 66 கி.மீ, சேத்தியாத்தோப்பு முதல் சோழபுரம் வரையிலான 50 கி.மீ, சோழபுரம் - தஞ்சாவூர் வரையிலான 48 கி.மீ சாலை என மூன்று பிரிவுகளாக சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் தஞ்சாவூர் - சோழபுரம், சோழபுரம் - சேத்தியாதோப்பு சாலைப் பணிகள் நிறைவுபெற்று அண்மையில் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவைக்கப்பட்டன. இதனையடுத்து, தஞ்சாவூர் - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் சோழபுரம் அடுத்த பகுதியில் புதிய சுங்கச் சாவடி அமைக்கும் பணிகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஈடுபட்டது. ஜூன் 12ஆம் தேதி முதல் இந்த சுங்கச் சாவடி செயல்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

சுங்கச் சாவடி பணிகள் நிறைவு பெறாததால் ஜூன் 12ஆம் தேதி திறக்க முடியவில்லை. குறிப்பாக மானம்பாடி சுங்கச் சாவடியில் பாஸ்டேக், மின்னணு சாதனங்கள், ஒளிரும் மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் முடிவடையாமல் உள்ளது. இந்தப் பணிகள் முடிந்த உடன் செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மானாம்பாடி சுங்கச் சாவடி இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

அதன்படி, கார் மற்றும் வேன் ஆகியவை சுங்கச் சாவடியை கடந்து செல்ல ஒருமுறைக்கு 105 ரூபாய் கட்டணமாகவும், இருமுறை அதே வழியில் பயணிக்க 160 ரூபாய் கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. வணிக வாகனங்களுக்கு 55 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்படும். அதேபோல இலகுரக வணிக வாகனம், சிறிய ரக சரக்கு வாகனங்கள், மினி பஸ் ஒருமுறை சென்று வர 170 ரூபாயும் இருமுறை பயணிக்க 255 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகள், ட்ரக் ஆகியவை செல்ல 360 ரூபாயும், பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு 560 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 
சுங்கச் சாவடிக்கு 20 கிமீ சுற்றளவில் வசிப்பவர்கள் மாதம் ரூ.340 பாஸ் எடுத்து டோல் கட்டணமின்றி பயணிக்கலாம் என்ற விதி உள்ளது. அதே சமயம் உள்ளூர் பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஏனெனில் கும்பகோணம் பகுதியில் சந்தை உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இதனால் விவசாயிகள், வணிகர்கள் நாள்தோறும் கும்பகோணத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். சுங்கச் சாவடியை சுற்றி உள்ளவர்கள் விவசாயிகள், கூலித் தொழிலாளர்களாக உள்ளதால் மாதாந்திர கட்டணத்தில் இருந்தும் விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

தற்போது இந்தியா முழுவதும் 1228 சுங்கச் சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. அதில், 78 சுங்கச் சாவடிகள் தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் சுமார் 12 சுங்கச் சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், சாலை அமைக்கப்பதற்காக செலவிடப்பட்ட தொகையை விட அதிகமாக செலவு செய்த பிறகும் சுங்கச் சாவடிகள் செயல்படுவதாக எதிர்ப்புகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

related_post