dark_mode
Image
  • Friday, 04 July 2025

தொலைபேசி உரையாடல்களை ஒட்டுகேட்க முடியாது: ஐகோர்ட்

தொலைபேசி உரையாடல்களை ஒட்டுகேட்க முடியாது: ஐகோர்ட்

சென்னை: 'குற்றங்களை கண்டுபிடிக்க, ஒருவரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை பெருங்குடியில், 'எவரோன் எஜுகேஷன் லிமிடெட்' என்ற நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கிஷோர். இந்நிறுவனத்தில், வரி ஏய்ப்பு புகாரில், வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

பின், வரி விதிப்பை தவிர்க்க, 50 லட்சம் ரூபாய் வரை, வருமான வரித்துறை அதிகாரிக்கு, லஞ்சம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டில், கிஷோர், வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர் உட்பட மூவருக்கு எதிராக, 2011ல் சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணை, சென்னையில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், கிஷோரின் தொலைபேசி உரையாடல்கள், தகவல்களை ஒட்டுக்கேட்க சி.பி.ஐ.,க்கு அதிகாரம் வழங்கி, மத்திய உள்துறை அமைச்சகம், கடந்த 2011ம் ஆண்டு ஆக., 12ல் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கிஷோர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.

பின் அவர் பிறப்பித்த உத்தரவு:


சட்டப்படி நியாயப்படுத்தாத வரை, தனி நபரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பது அந்தரங்க உரிமைக்கு விரோதமானது என்பதால், குற்றச் செயல்களை கண்டறிவதற்காக ரகசியமாக ஒட்டுக்கேட்பது அனுமதிக்கத்தக்கதல்ல.

பொது பாதுகாப்பு, பொது அவசரம் காரணமாக மட்டும், தனி நபர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க முடியும். அதேபோல் நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான நட்புறவு, பொது அமைதி, குற்றச்செயல்களை தடுப்பது போன்ற நிகழ்வுகளில் மட்டும் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க அனுமதியளிக்க முடியும்.

இந்த வழக்கை பொறுத்தமட்டில், பொது அவசரம், பொது பாதுகாப்பு ஏதும் சம்பந்தப்படவில்லை என்பதால், கிஷோரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க மத்திய உள்துறை அமைச்சகம் 2011 ஆக.12ல் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

related_post