பிரச்சனைகளுக்கு தீர்வும், மக்கள் நலனுக்குத் துணையும் – 20 தீர்மானங்களுடன் வெற்றிக் கழக செயற்குழுக் கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். முக்கிய பிரச்சனைகள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக பரந்தூரில் விமான நிலையத்திற்கு எதிராக போராடும் மக்களும், விவசாயிகளும் தொடர்பாக கட்சி உறுதியுடன் துணை நிற்கும் என தெரிவிக்கப்பட்டது. விவசாய நிலங்களை பறிக்கும் மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி, அரசின் அதிகார மீறல்களும் கண்டிக்கபட்டன. நெல் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க அரசிடம் வலியுறுத்தப்பட்டது. பெரும் நட்டத்தை சந்தித்த மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்றும் கூறப்பட்டது.
மலைக்கோட்டை பகுதியில் பரவலாக நடைபெறும் மணல் கொள்ளை குறித்து கவலை தெரிவித்து அதனை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் பேசப்பட்டது. என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் வழங்கியவர்கள் இன்னும் உரிய இழப்பீட்டுத் தொகையும், வேலை வாய்ப்பும் பெறாத நிலைமை குறித்து வேதனை தெரிவிக்கப்பட்டது. மேலும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தும் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. விசைத்தறி தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் மீது அரசு கவனம் செலுத்த வேண்டியதையும், மூவரு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டுமென்றும் கூறப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் வாசனைத் திரவிய ஆலை ஒன்றை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெறும் கனிமவளக் கொள்ளையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்பதும் முக்கியமாக முன்வைக்கப்பட்டது.
ஜாக்டோ-ஜியோ அமைப்பின் போராட்டத்திற்கும் கட்சி முழுமையான ஆதரவு தருவதாக அறிவிக்கப்பட்டது. அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணிக்கும் அரசின் செயற்பாடு கண்டிக்கபட்டது. மருத்துவர்களை நம்ப வைத்து ஏமாற்றாத வகையில், கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவை இந்தியா ஒப்பந்த அடிப்படையில் குத்தகைக்கு பெற வேண்டும் எனக் கூறப்பட்டது. இருமொழிக் கொள்கையை கட்சி தொடர்ந்து வலியுறுத்தும் நிலையில், மொழி சமத்துவத்தையும் மாணவர்களின் உரிமையையும் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசின் தாக்கங்களை எதிர்க்க வேண்டியதன் அவசியம் பேசப்பட்டது.
தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் சிறுபான்மையினரின் பெயர்களை நீக்கும் முயற்சிகள் நடப்பதாக கூறி, சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள் மூலம் வாக்குகளை குறைக்கும் முயற்சியை தடுக்க வேண்டும் எனக் கட்சி வலியுறுத்தியது. கீழடியில் தமிழர் நாகரிகத்தின் ஆதாரங்களை மறைக்கும் முயற்சிகளை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருவது கண்டிக்கப்பட்டது. அதனை பறைசாற்றி தமிழக பாரம்பரியத்தை மக்களுக்கு தெளிவாக எடுத்துச் செல்லும் பொறுப்பு தமிழக வெற்றிக் கழகத்துக்கே சொந்தம் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. திமுக அரசு தமிழக வெற்றிக் கழகத்துக்கு எதிராக கபட நாடகங்கள் நடத்தி வருகிறது எனக் கூறி, அரசின் அராஜகப் போக்கை கடும் மொழியில் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் மத்திய அரசின் திட்டம் மாநிலங்களின் அடையாளம் மற்றும் தேர்தல் சுதந்திரத்தை அழிக்கும் செயல் என்பதால் அதை கட்சி கண்டிப்பதாக தெரிவிக்கப்பட்டது. தொகுதி மறுசீராய்வு என்பது அரசியல் பயன்பாட்டுக்காக இல்லாமல், மக்களின் பிரதிநிதித்துவத்திற்காக மட்டுமே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. காவல் துறையினரால் விசாரணையின் போது உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்கும் வகையில் உள்துறை அமைச்சர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கப்பட்டது. காவல் துறை சீர்திருத்தம் அரசின் முக்கிய உத்தியாக அமைய வேண்டும் எனக் கூறப்பட்டது. பெரியார், அண்ணா போன்ற முன்னோடிகளை அவமதிக்கும் பாஜக அரசியலை கட்சி கடுமையாக எதிர்க்கும் எனத் தீர்மானிக்கப்பட்டது. சமூக நலனில் அக்கறை இல்லாத பிளவுவாத அரசியலை தமிழக மக்கள் நிராகரிப்பார்கள் என கூட்டத்தில் தெரிவித்தனர். 20 தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்தக் கூட்டம், கட்சியின் நிலைப்பாடுகளை தெளிவாகக் காட்டி மக்களிடம் புதிய நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது.