அரசு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல்: முதல்வர் தடுத்து நிறுத்த ஓபிஎஸ் வலியுறுத்தல்
அரசுப் பேருந்துகளில், நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அரசுப் பேருந்துகளின் கட்டணத்தை எவ்வித முன்னறிவிப்புமின்றி திமுக அரசு உயர்த்தியுள்ளது. நகரப் பேருந்துகளில் சிறிய இடைவெளியிலான, அதாவது 2 கிலோ மீட்டருக்கு உட்பட்ட நிறுத்தங்களுக்குக் கூட ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
புறநகர் சாதாரண பேருந்துகளில் ஒரு கிலோ மீட்டருக்கு 58 பைசா என்பதைத் தாண்டி 75 பைசா வசூலிக்கப்படுகிறது. விரைவு பேருந்துகளில் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணம் சாதாரண பேருந்துகளில் வசூலிக்கப்படுகிறது.
இதுதவிர, குறைந்தபட்சம் 120 கி.மீ.செல்ல வேண்டிய விரைவுப் பேருந்துகளின் கட்டணத்தை 25 கி.மீ. பயணிக்கும் பேருந்துகளுக்கு கூடவிரைவுப் பேருந்து என கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இதுதவிர 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு முழுக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு கோவையில் மட்டும் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 170 பேருந்துகள் மீது வழக்குபோடப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத் துக்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வும், விரைவுப் பேருந்து கட்டணத்தை சாதாரண பேருந்துகளில் வசூலிப்பதை நிறுத்தவும் முதல்வர் நடவடிக்கைஎடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.