அடுத்தடுத்து சர்ச்சைக்குள்ளாகும் யூடியூபர்கள்.. அடுத்து சிக்கும் விஜே சித்து..!
யூடியூபர் விஜே சித்துவுக்கு எதிராக சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஜே சித்து போக்குவரத்து விதிகளை மதிக்காமலும் அஜாக்கிரதையாகவும், செல்போனில் பேசியபடி வாகனத்தை இயக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்த சம்பந்தப்பட்ட வீடியோ யூடியூப்பில் வெளியிட்ட நிலையில், அதனை பார்த்து மாணவர்கள், இளைஞர்கள் தவறான வழியில் செல்ல வழிவகுக்கும் என்றும், வீடியோவில் ஆபாச வார்த்தைகள், இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் போக்குவரத்து விதிகளை மீறிய விஜே சித்து மீது தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ஷெரின் என்பவர் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து விசாரணை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீப காலமாக யூடியூபர்கள் இர்பான், டிடிஎஸ் வாசன் உள்ளிட்டோர் சர்ச்சைகளில் சிக்கிய நிலையில் தற்போது அடுத்த கட்டமாக விஜே சித்துவும் சர்ச்சையில் சிக்கியிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. யூடியூபில் அதிக வருமானம் கிடைப்பதால் சட்ட விதிகளை மதிக்காமல் தங்கள் இஷ்டத்துக்கு வீடியோக்களை பதிவு செய்து வருவதால் தான் இந்த பிரச்சனை வருகிறது என்று கூறப்படுகிறது.