
விஜய் ஹசாரே கோப்பை: மிரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் வீரர்கள், உற்சாகத்தில் சென்னை ரசிகர்கள்
ராபின் உத்தப்பா (கோப்புப்படம்)
ஐபிஎல் 2021 சீசனுக்கான ஏலம் சில தினங்களுக்கு முன் நடந்து முடிந்துள்ளது. அப்போதில் இருந்தே ஐபிஎல் 2021 சீசன் குறித்த ஆர்வம் ரசிகர்கள் இடையே அதிகரிக்கத் துவங்கிவிட்டது.
கடந்த முறை ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்குக் கூட தகுதி பெறாமல் வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்நிலையில் தற்போது அந்த அணியின் ரசிகர்கள் திடீரென உற்சாகத்தில் மிதந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு காரணம் விஜய் ஹசாரே டிராபி.
இந்த தொடரில் சென்னை வீரர்கள் சிலர் கலக்கி வருகிறார்கள். சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இது தொடர்பாக தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகிறது.
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் கோப்பை தொடரான விஜய் ஹசாரே டிராபியின் லீக் சுற்று போட்டிகள் முடிவுக்கு வந்துள்ளன.
இந்த தொடரின் முதல் சுற்றிலேயே ராபின் உத்தப்பா, ருதுராஜ் கேயக்வாட், என்.ஜெகதீசன் மூவருமே சதமடித்து இத்தொடரை தொடங்கினார்கள். அதன்பிறகும் பல சிறப்பான செயல்பாடுகளை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அரங்கேற்றியிருக்கிறார்கள். அது குறித்து ஒரு சிறு தொகுப்பு.
ராபின் உத்தப்பா
சிஎஸ்கே அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இருந்து நேரடியாக 'ட்ரேட்' எனும் முறை மூலம் உத்தப்பாவை வாங்கியபோது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவற்றையெல்லாம் ஐ.பி.எல் தொடங்குவதற்கு முன்பே உடைந்திருக்கிறார் தற்போது கேரள அணிக்காக ஆடிவரும் உத்தப்பா.
ஒடிசாவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே சதமடித்து இந்தத் தொடரைத் தொடங்கியவர், லீக் சுற்றின் 5 போட்டிகளில் மொத்தம் 375 ரன்கள் குவித்திருக்கிறார். அவரது சராசரி 93.75 ரன்கள். இரண்டு சதம், இரண்டு அரை சதம் விளாசி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒடிசா (107 ரன்கள்), உத்தர பிரதேசம் (81 ரன்கள்), ரெயில்வேஸ் (100 ரன்கள்), பிஹார் (87 ரன்கள்) என அனைத்து அணி பௌலர்களின் பந்துவீச்சையும் பந்தாடினார் உத்தப்பா.
தனது பழைய அணியான கர்நாடகாவுக்கு எதிராக மட்டும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அவர் அடித்த ரன்களைவிட, அதை அடித்த விதம்தான் அனைவரின் கவனத்தையும் பெற்றது. தன் திறனை நிரூபிக்க வேண்டும் என்பதில் உத்தப்பா தீர்க்கமாக இருந்தார் என்பது அவர் ஆட்டத்தில் வெளிப்பட்டது. முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்டவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இந்தத் தொடரில் அவரது ஸ்டிரைக் ரேட் 135.37.
பிஹாருக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் வென்று அதிக ரன் ரேட் பெற்றால்தான் கேரளா அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற சூழ்நிலையில், உத்தப்பா ஆடிய தாண்டவம் யாராலும் மறக்க முடியாதது.
வெறும் 32 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் குவித்தார் ராபீ. வெறும் 8.5 ஓவர்களில் 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது கேரளா. அந்தப் போட்டியில் மட்டும் அவர் 10 சிக்ஸர்களை விளாசினார்.
லீக் சுற்றின் முடிவில் அதிக சிக்ஸர்கள் விளாசிய பட்டியலில் உத்தப்பா 23 சிக்ஸர்களோடு முதல் இடத்தில இருக்கிறார்.
இந்த தொடரில் ரெயில்வேஸ் அணிக்கெதிராக விஷ்ணு வினோத்துடன் இணைந்து அவர் அமைத்த 193 ரன் பார்ட்னர்ஷிப் முக்கியமானது.
ஷர்துல் தாக்குர்
ஷர்துல் தாக்குர்
'சூப்பர் கிங்ஸின் நம்பர் 10 வீரரும் பயங்கர பேட்ஸ்மேன்' என்று சி.எஸ்.கே ரசிகர்களைக் கொண்டாட வைத்திருக்கிறார் ஷர்துல் தாக்குர். விஜய் ஹசாரே தொடரில் அவர் மும்பை அணிக்காக ஆடி வருகிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தன் பேட்டிங் திறனைக் காட்டியவர், நேற்று இமாச்சல் பிரதேசத்துக்கு எதிராகவும் தன் அமர்க்கள ஆட்டத்தைத் தொடர்ந்தார்.
148 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த அணிக்கு, ஆதித்யா தாரேவுடன் இணைந்து ஒரு நல்ல கூட்டணி அமைத்து உயிர்கொடுத்தார். பௌண்டரி, சிக்ஸர் என்று வெளுத்துக்கட்டிய ஷர்துல் 57 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பேட்டிங்கில் மட்டுமல்ல, பந்துவீச்சிலுமே சிறப்பாகவே செயல்பட்டார் ஷர்துல். குறிப்பாக ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் பட்டையைக் கிளப்பி ஆல்ரவுண்டர் அவதாரம் எடுத்துக்கொண்டிருக்கிறார் ஷர்துல் தாகுர்.
என். ஜெகதீசன்
தமிழ்நாடு அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இருவரில் நாராயண் ஜெகதீசனும் ஒருவர்.
5 போட்டிகளில் 217 ரன்கள் அடித்திருக்கிறார். பஞ்சாப் அணிக்கெதிரான முக்கியமான முதல் போட்டியில் சதமடித்து, தமிழ்நாடு வெற்றி பெற உதவினார்.
289 ரன்களை சேஸ் செய்த தமிழ்நாடு, இரண்டாவது ஓவரிலேயே ஓப்பனர் அருண் கார்த்திக்கை இழந்தது. அப்படிப்பட்ட நிலையில் பாபா அபராஜித்துடன் இணைந்து 182 ரன்கள் குறித்து அசத்தினார். முன்னணி பௌலர்கள் அனைவரையும் சிறப்பாக எதிர்கொண்டு அந்த சதத்தை நிறைவு செய்தார்.
தமிழ்நாடு தடுமாறிய அடுத்தடுத்த போட்டிகளில் ஜெகதீசன் செயல்பாடும் சிறப்பானதாக அமையவில்லை. அடுத்த 3 போட்டிகளிலும் சேர்த்து 68 ரன்களே எடுத்தார்.
ஆனால் கடைசிப் போட்டியில், கேரளாவைப் போல் தமிழ்நாட்டிற்கும் ரன்ரேட் அவசியம் எனானது. அப்படிப்பட்ட நிலையில், 18 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து அமர்க்களப்படுத்தினார். இந்த சீசனில் 91.17 எனும் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார்.
ருதுராஜ் கெய்க்வாட்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த சீசனில் கடைசி சில போட்டிகளில் நம்பிக்கை தரும் தொடக்க வீரராக ருதுராஜ் கெய்க்வாட் உருவெடுத்தார்.
விஜய் ஹசாரே தொடரில் மகாராஷ்டிர அணிக்காக விளையாடிவருகிறார். அவர்தான் அணித்தலைவரும் கூட.
இந்த தொடர் அவருக்கு மிகச் சிறப்பானதாக அமையவில்லை. முதல் போட்டியில் இமாச்சலுக்கு எதிராக சதமடித்துத் தொடங்கினாலும், அடுத்தடுத்த போட்டிகளில் அவர் 30 ரன்களைக்கூடத் தாண்டவில்லை. நல்ல ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியிருந்தாலும், இவரது சையது முஷ்தாக் அலி, விஜய் ஹசாரே செயல்பாடுகள், உத்தப்பாவின் ஃபார்ம் ஆகியவை, சூப்பர் கிங்ஸ் டாப் ஆர்டரில் இவருக்கு சிக்கலை ஏற்படுத்தலாம்.
ஹரி நிஷாந்த்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் இந்த ஏலத்தில் வாங்கப்பட்ட தமிழக வீரர் ஹரி நிஷாந்த், விஜய் ஹசாரே டிராபியில் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.
தமிழக கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் சுழற்சி முறை கொள்கையால் அவருக்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே கிடைத்தது. ஆனால், அந்த வாய்ப்புகளை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளத் தவறிவிட்டார் ஹரி நிஷாந்த்.
ஆந்திராவுக்கு ஏதிராக 4 ரன்களும், மத்திய பிரதேசத்துக்கு எதிராக 6 ரன்களும் மட்டுமே எடுத்தார். சையது முஷ்தாக் அலி தொடரில் சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும், விஜய் ஹசாரே தொடர் அவர் எதிர்பார்த்ததுபோல் அமையவில்லை.
கரண் ஷர்மா
உத்தர பிரதேச அணியின் சீனியர் ஸ்பின்னர் இந்தத் தொடரில் பெரிய தாக்கம் ஏற்படுத்தவில்லை. 5 போட்டிகளில் சேர்த்து வெறும் 5 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார்.
சாய் கிஷோர்
சிஎஸ்கே அணியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் வீரர்களில் ஒருவர் சாய் கிஷோர். சுழற்பந்து வீச்சாளரான சாய்க்கு இதுவரை சிஎஸ்கேவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் ஹர்பஜன் விடுவிக்கப்பட்ட நிலையில் இவருக்கு சில போட்டிகளில் வாய்ப்பளிக்கப்படலாம்.
இந்நிலையில். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு தொடரிலுமே சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் சாய் கிஷோருக்கு இது சுமாரான தொடராக அமைந்தது.
5 போட்டிகளிலும் மொத்தம் 3 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார். தன்னுடைய டிரேட் மார்க்கான சிக்கன பந்துவீச்சை இந்தத் தொடரிலும் வெளிப்படுத்தினார். ஓவருக்கு சராசரியாக 3.47 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் பெரிதாக சோபிக்கவில்லையென்றாலும், பேட்டிங்கில் முன்னேற்றம் காட்டியிருக்கிறார். ஜார்கண்ட் அணிக்கெதிராக கடைசி நேரத்தில் அதிரடி காட்டி 20 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து அசத்தினார்.
ஹரிஷங்கர் ரெட்டி
யாரும் எதிர்பாராத வகையில் இந்த ஆந்திர வேகப்பந்துவீச்சாளரை வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்.
விஜய் ஹசாரே தொடரில் முதல் 2 போட்டிகளில் விக்கெட் எடுக்கவில்லையென்றாலும், அடுத்த 2 ஆட்டங்களில் 5 விக்கெட்டுகள் எடுத்தார். ஜார்கண்ட் அணிக்கெதிரான கடைசி போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி, தன் தேர்வை நியாயப்படுத்தியிருக்கிறார் ஹரிஷங்கர் ரெட்டி.