
மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு ( அதிகாரிகளை தடியால் அடியுங்க)
பெகுசராய் :''உங்கள் குறைகளை அதிகாரிகள் கேட்கவில்லை எனில், மூங்கில் தடியால், அவர்களது தலையில் அடியுங்கள்,'' என, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியது, சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.மத்திய கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக இருப்பவர்.
பா.ஜ.,வைச் சேர்ந்த கிரிராஜ் சிங் கிஷோர். சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசுவது, இவரது வழக்கம்.பீஹார் மாநிலம், பெகுசராய் தொகுதி எம்.பி.,யான கிரிராஜ் சிங் கிஷோர், இங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தாவது:என் தொகுதியில் உள்ள அதிகாரிகள் சிலர், மக்களின் குறைகளை அலட்சியப்படுத்துவதாக, தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இது போன்ற சிறிய விஷயங்களை நிறைவேற்றத் தான், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளும், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர்.அவர்கள் அனைவரும், மக்கள் பணி செய்ய கடமைப்பட்டுள்ளனர்.
கோரிக்கை களுக்கு, அவர்கள் செவி சாய்க்கவில்லை என்றால், மூங்கில் தடியால் அவர்களது தலையில் மக்கள் அடிக்க வேண்டும். அப்போதும் அவர்கள் அந்தப் பணியைச் செய்யாவிட்டால், பிரச்னையை என்னிடம் கூறுங்கள்; நான், என் பலத்தைக் காட்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார். கிரிராஜ் சிங் கிஷோரின் இந்தப் பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.