
மகிழ்ச்சியாக வாழத் தகுந்த நாடுகள் பட்டியலில் பின்லாந்து முதலிடம்: 139- வது இடத்தில் இந்தியா
உலகில் மகிழ்ச்சியாக வாழத் தகுந்த நாடுகள் பட்டியலில் தொடர்ந்து 4 ஆவது ஆண்டாக பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. இந்தியா 139 ஆவது இடத்தில் இருப்பதாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
உலகில் மக்கள் மகிழ்ச்சியாக கவாழத் தகுந்த நாடுகளின் பட்டியலை, ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான தீர்வுகள் குழு ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் மொத்தம் 156 நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் இந்தியா 144 ஆவது இடத்தை பிடித்தது.
இந்த நிலையில் 2021 ஆம் ஆட்டிற்கான மக்கள் மகிழ்ச்சியாக வாழத் தகுந்த நாடுகளின் பட்டியலை நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டது. ஆய்விற்காக மொத்தம் 149 நாடுகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில், தொடர்ந்து நான்காவது ஆண்டாக பின்லாந்து முடிதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
டென்மார்க் 2 ஆவது இடமும், சிவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து, நெதர்லாந்து, நார்வே, சுவீடன், லக்சம்பர்க், நியூசிலாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது. இஸ்ரேல், ஜெர்மனி, கனடா, அயர்லாந்து, கோஸ்டாரிகா, இங்கிலாந்து, செக் குடியரசு போன்ற நாடுகள் அடுத்த பத்து இடங்களை பிடித்துள்ளது.
கரோனா நோய்த்தொற்றுக்கு உலகளவில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான அமெரிக்கா 19 ஆவது இடத்தை பிடித்துள்ளது. 2019 இல் 140 ஆவது இடத்திலும், 2020 இல் 156 நாடுகளில் நடத்தப்பட ஆய்வில் 144 ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 2021 இல் 149 நாடுகளில் 139 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
ஆய்வின்படி, நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான் 105 ஆவது இடத்தையும், வங்கதேசம் 101 ஆவது இடத்தையும், சீனா 84 ஆவது இடத்தையும், இலங்கை 129 ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து லெசோதோ (145), போட்ஸ்வானா (146), ருவாண்டா (147), மற்றும் ஜிம்பாப்வே (148) அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.
இந்த ஆய்வில் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் மக்கள் தங்கள் வாழ்க்கையில் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இந்தியாவுக்கு கீழே புருண்டி, யேமன், தான்சானியா, ஹைட்டி, மலாவி, லெசோதோ, போட்ஸ்வானா, ருவாண்டா மற்றும் ஜிம்பாப்வே உள்ளிட்ட ஒன்பது நாடுகள் இடம் பெற்றுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான தீர்வுகள் குழு ஆய்வுக்காக, முதலில் மக்களின் வாழ்க்கையின் கட்டமைப்பு மற்றும் தரம் ஆகியவற்றில் கரோனா நோய்த்தொற்றின் விளைவுகளை மையமாகக் கொண்டதாகவும், உலகம் முழுவதும் உள்ள அரசுகள் நோய்த்தொற்றை கையாண்ட விதத்தை விவரிப்பதாகவும், மதிப்பீடு செய்யும் விதமாகவும், வாழ்க்கை மதிப்பீடுகள், நேர்மறையான உணர்ச்சிகள் மற்றும் எதிர்மறையான உணர்ச்சிகள் அதாவது "மகிழ்ச்சி", "சிரிப்பு" மற்றும் "இன்பம்" "கவலை", "சோகம்" மற்றும் "கோபம்" ஆகிய குறியீடுகளை மையமாகக் கொண்டு மிகவும் கூடுதல் கவனத்துடன் எடுக்கப்பட்டுள்ளது. இவை தவிர, தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஆரோக்கியமான ஆயுட்காலம், சமூக ஆதரவு, வாழ்க்கைத் தேர்வுகளைச் செய்வதற்கான சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் ஊழல் கருத்து தொடர்பான தரவுகளையும் இந்த ஆய்வில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.